ஜூட் சமந்த
உரிமம் இல்லாமல் வேலைவாய்ப்புக்காக மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக பணம் பெற்று மோசடி செய்த ஒரு நிறுவனத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சுற்றி வளைத்ததுடன், உரிமையாளர் உட்பட நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.
மரதானையில் உள்ள ஸ்ரீ பிரியதர்ஷனாராம மாவத்தையில் இயங்கும் ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மூன்று ஊழியர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அந்த இடத்தை சோதனை செய்த அதிகாரிகள் 256 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சுமார் 85 புகார்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் இதற்கு முன்னர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி பல மோசடி செய்த விடயங்களுக்காக வழக்குகள் தொடரப்பட்டு அதன் உரிமத்தை இடைநிறுத்தியதாக தெரியவந்துள்ளது.
உரிமம் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


