இலங்கையில் தோல்வியுற்ற நிவாரணம்: மூன்று நாட்கள் மரணத்தின் நிழலில் உயிர் பிழைத்தவனின் சாட்சி இது!
நான் இந்தக் கட்டுரையை எழுதுவது ஒரு செய்தியைப் பகிர்வதற்காக மட்டும் அல்ல நான் நேரடியாக அனுபவித்த வேதனையை பேசுவதற்காகவும், எங்களை காப்பாற்ற வேண்டிய நாட்டின் நிர்வாகம் எங்களை எப்படி புறக்கணித்தது என்பதை உலகத்துக்கு சொல்லுவதற்காகவும்.
அந்த அனர்த்தத்திலிருந்து உயிர் தப்பிய ஒருவராக, நான் கண்ட எல்லா கொடுமைகளையும், நான் சுமந்த அனைத்து துயரங்களையும் ஒரு சொட்டும் மெருகூட்டாமல், உண்மையாகவே இங்கே எழுதுகிறேன்.
சிலாபம், தெதுறு ஓயா
“உதவி வருகிறது” என்ற அரசு பிரிவுகளின் வாக்குறுதிகளை நம்பி, நான் மற்றும் சுமார் 250 பேர் மூன்று நாட்கள் வெள்ளநீரால் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுக் கிடந்தோம். குடிநீர் இல்லை, உணவு இல்லை, மருந்து இல்லை, எங்களுடைய ஒரே துணை இறைவனின் நாட்டத்தினால் அச்சமும், இருட்டும், பட்டினியும்.
மூன்று நாட்கள்: உயிருக்கும் மரணத்துக்கும் இடையில்
ஹைலேண்ட் பால் சேமிப்பு நிலையத்தை அண்டிய பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தபோது, நாங்கள் எவரும் வெளியில் வரவோ, எவரும் உள்ளே வரவோ முடியாத நிலை.
அந்த மூன்று நாட்களின் காட்சிகள்:
பட்டினியில் கதறும் குழந்தைகள், குளிரில் நடுங்கிய வயோதிபர்கள், குடிக்க தண்ணீர் இல்லாமல் நச்சுநீர் குடித்து உயிர் பிழைக்க முயன்ற இளைஞர்கள், எம்முன்னே நீரில் அடித்துச் செல்லப்பட்ட மனிதர்கள்.
இந்த அனைத்தும் கற்பனை அல்ல, நான் கண்களால் கண்டவை. நான் வாழ்ந்து மீண்டவை.
உதவி கோரிய ஒவ்வொரு அழைப்பும் வெறும் வெறுமையான வார்த்தைகள்.
நாங்கள் தகவல் கொடுத்தோம்:
அனர்த்த முகாமை பிரிவு, இலங்கை போலீஸ் திணைக்களம், இலங்கை கடற்படை, ஜனாதிபதி செயலகம், தொடர்புடைய அரசு அதிகாரிகள், ஆனால் பெற்ற பதில்கள்:
“உங்கள் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.”
“இன்னும் சற்று சமயத்தில் உதவி வருகிறது.”
“ஐந்து மணிக்கு உணவுப் பொதிகள் அனுப்புகிறோம்.”
“கவலைப்பட வேண்டாம், நடவடிக்கை நடக்கிறது.”
“உங்களைக் காப்பாற்ற இராணுவ லொறி Truck வருகிறது.”
நடவடிக்கை? கரையில் நின்றிருந்த நீரின் அமைதி போலவே அமைதியாகவே அவர்களும். உதவி எதுவும் வரவில்லை.
எங்களை வந்தடைந்தது வெறும் வார்த்தைகள் தான் உதவி அல்ல. உயிர் ஆபத்தில் இருந்த அந்த தருணங்களில் இந்த காலியான வாக்குறுதிகள் மரணத்தைவிட வேதனையானவை.
ஜனாதிபதியின் உத்தரவுகள் தரையில் இருந்த அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்ட அவலநிலை.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் துரித நடவடிக்கை உத்தரவுகள் வழங்கப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டோம்.
ஆனால் தரையில் இருப்பவர்களின் செயல்பாடு? உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை, அதிகாரிகள் அலட்சியம் காட்டினர், நிவாரணத் திட்டம் முழுமையாக முறியடிக்கப்பட்டது, இதன் விளைவாக, நாங்கள் 250 பேரும் இயற்கையின் தாக்கத்தைவிட அதிகமான மனித அலட்சியத்தின் தாக்கத்தையே அனுபவித்தோம்.
இது வெள்ளத்தின் அழிவு மட்டும் அல்ல; நிர்வாகத் தோல்வியின் காயமும்
அந்த மூன்று நாட்கள் எங்களை கற்றுக் கொடுத்தது:
அனர்த்தம் இயற்கையின் செயல், ஆனால் அனர்த்தத்தை துயரமாக மாற்றுவது மனிதர்களின் பொறுப்பின்மை, நாங்கள் நம்பிய அமைப்புகள், எப்போது வேண்டுமோ அப்போது செயலிழந்தன. நாங்கள் காத்திருந்த அரசு பிரிவுகள், நாங்கள் மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் எங்களைக் காப்பாற்றத் தவறவிட்டன.
கடைசியில், எங்களை காப்பாற்றியது இறைவனின் நாட்டத்தினால் நாங்களே..
எந்த அதிகாரியும் எங்களை சேரவில்லை, எந்த உதவியும் வரவில்லை, நாங்கள் தானே எங்களைத் தாங்கிக் கொண்டோம்.
என் வாழ்நாள் நினைவில் நிலைத்திருக்கும் கொடுமையான உண்மை இதுதான்:
இலங்கையில் நிவாரணம் தோல்வியுற்றது, இயற்கையால் அல்ல, அரசின் அலட்சியத்தால்.
சதக்கத்துல்லாஹ் முஹம்மது ரிஜாஜ் (முன்னாள் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்)




