டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் நாகவில்லு கிராமத்தின் பாடசாலையில் இன்று சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து புத்தளத்திற்கு வருகை தந்த “சிவப்பு சகோதரர்கள்” தன்னார்வ தொண்டர்கள் கொண்ட குழுவினால் குறித்த சிரமதானப்பணி இன்று முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தை அடுத்து நாடு தற்பொழுது படிப்படியாக மீண்டு வருகின்ற நிலையில், ஹம்பாந்தோட்டையில் இருந்து சுமார் 250 பேர் கொண்ட தன்னார்வ தொண்டர்கள் கொண்ட குழு ஒன்று இன்று புத்தளத்தை வந்தடைந்தது.
புத்தளம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடையாளம் கண்டு சுமார் ஐந்து நாட்களை வரை இங்கு தங்கி இருந்து, குறித்த சிரமதானப்பணியை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தன்னார்வ தொண்டர்கள் குழுவின் புத்தளம் மாவட்டத்திற்கான ஏற்பாட்டாளர் தோழர் சிவா எமது ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு தெரிவித்தார்.
அந்த வகையில் முதல் நாளான இன்று, நாகவில்லு கிராமத்தில் உள்ள பு/எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் வகுப்பறைகள், அதிபர் காரியாலயம் உள்ளிட்ட பாடசாலை வளாகம் குறித்த தன்னார்வ தொண்டர்கள் குழுவினரால் மின்னல் வேகத்தில் துப்பரவு செய்யப்பட்டது.
குறித்த பணியை நேர்த்தியாக முன்னெடுக்க உதவிய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் மற்றும் பிரதேச அமைப்பாளர் தோழர் சிராஜ் ஆகியோருக்கும், ஹம்பாந்தோட்டையில் இருந்து புத்தளத்திற்கு வருகை தந்த “சிவப்பு சகோதரர்கள்” தன்னார்வ தொண்டர்களுக்கும் கல்லூரியின் அதிபர் ஜனாப் SM. ஹுஸைமத் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்தார்.
இதேவேளை ஹம்பாந்தோட்டையில் இருந்து புத்தளத்திற்கு வருகை தந்த “சிவப்பு சகோதரர்கள்” தன்னார்வ தொண்டர்கள் குழுவின் மற்றுமொரு அணி இன்றைய தினம் மாதம்பை பகுதியிலும் துப்பரவு பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே போன்ற மற்றுமொரு தன்னார்வ தொண்டர்கள் கொண்ட அணி ஒன்றும், மாத்தறையில் இருந்து பதுள்ளைக்கு சுமார் 850 பேருடன் துப்பரவு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக சென்றுள்ளமை விஷேட அம்சமாகும்.














