ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் இந்தியாவில் கஷ்மீர் மாநிலம் இரண்டாக உடைக்கப்பட்டதோடு வழங்கப்பட்ட சிறப்புரிமையும் நீக்கப்பட்ட தருணம் அது.
முன்னாள் முதலமைச்சர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்ததுடன், கஷ்மீர் வாழ் மக்களும் பெரும் அவலங்களுக்குள்ளாகி இருந்தனர்.
அவ்வேளையில் நீண்ட காலமாகக் கஷ்மீருக்காகக் குரலெழுப்பி வந்தவரும், முன்னாள் இலங்கை வானொலி ஹிந்தி சேவைப் பணிப்பாளரும், வர்த்தக சேவைப் பணிப்பாளரும், கஷ்மீர் மூவ்மென்ட், மற்றும் கஷ்மீர் ஸ்டடி போரம் ஆகியவற்றின் தலைவருமான அல் ஹாஜ் முஹம்மது ஜமால்தீன் அவர்கள் பதிவிட்ட சில கருத்துக்களை எமது eNews1st இணையம் தொகுத்து வழங்குவதில் பெருமிதம் அடைகிறது.
1934ல் மன்னார் எருக்கலம்பிட்டியில் மொஹிதீன்
கப்புடையார் – குல்சும் உம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வராகப் பிறந்த மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் ஆரம்பம் முதல்
மன்னார் எருக்கலம்பிட்டியில் கல்வி கற்றதோடு தரம் 5 படித்து முடித்துவிட்டிருந்த நேரத்தில் சீ.டபிள்யூ. டபிள்யூ கண்ணங்கராவின் இலவச கல்வித் திட்டம் உதயம் பெற்று பல வரிய மாணவர்களின் கல்வியில் வெளிச்சம் வீசியது. கண்ணங்கராவின் இலவச கல்வித் திட்டத்தினால் தொடர்ந்து கல்விகற்கும் வாய்ப்பு இறைவன் கிருபையால் அவருக்கு கிடைத்தது.
பின்னர் யாழ் மத்திய கல்லூரிக்கு உயர்தர கல்விக்காகச் சென்று கல்வியைத் தொடர்ந்த மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் அங்கு எல்லா விளையாட்டுக்களிலும் கலந்துகொண்டு பல பதக்கங்களையும் வென்றதன் விளைவாக அதன் அபார ஈடுபாடு பல்கலைக்கழக நுழைவுக்கு பெரும் சவாலாக மாறியதுடன் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் ஆசிரியராக 3 வருடம் சேவையாற்றவும் வழி வகுத்தது.
இந்தியாவிற்கு மேல்படிப்பிற்காக சென்று லக்னோ பல்கலைக்கழகத்தில் (University of Lucknow) பட்டப்படிப்பும் பூர்த்தி செய்ததன் மூலம் இந்திய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்ததுடன் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் சிறப்பு தேர்ச்சியும் பெற்றிருந்தார்.
பட்டப்படிப்பை நிறைவு செய்து நாடு திரும்பி இருந்த நிலையில் இலங்கை தேசிய வானொலி சேவையில் இணைவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றது.
இலங்கை தேசிய வானொலி சேவையின் நேர்முகப் பரீட்சைக்கு சென்று தெரிவாகியதுடன் தேசிய வானொலி சேவையின் வெளிநாட்டுப் பிரிவின் வெளிநாட்டுச் சேவைகளுக்கான உதவி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.
குறுகிய காலம் செய்திப்பிரிவில் சேவை செய்த போதிலும் வெளிநாட்டுச் சேவைப் பிரிவு அவரது தலைமையின் கீழ் இருந்தமையானது அவரின் முதல் வெற்றியாகவே அவரால் பார்க்கப்பட்டது.
இலங்கை தேசிய சேவையில் ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் அவரின் கவர்ச்சிகரமான வர்ணனை மூலம் உள் நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மக்களின் மனதை வென்றிருந்ததுடன் அவரது வர்ணணை மற்றும் மொழி ஆற்றல் தொடர்பாக இந்தியாவில் அவரை பற்றிய ஒரு புத்தகமும் வெளிவந்திருந்தமை ஓர் சிறப்பம்சமாகும்.
1987 யில் இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தின் பணிப்பாளராக பதவியேற்ற மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் 1993ல் இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.
இந்திய பொலிவூட் திரைப்பட பாடல்களை உலகிற்கேயே ஒலிபரப்புச் செய்த பெருமை அப்போதைய தேசிய வானொலி சேவைக்கே உரித்தாகும்.
அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் தேசிய ஊடகங்களில் இந்திய பாடல்கள் ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்ததனால் இந்தியாவின் கோவாவிலுள்ள மக்கள் ஆங்கில பாடல்களை கேட்டு வந்தனர். இதைப் பாரத்த மும்பையிலுள்ள திரைப்பட இயக்குநர்கள் மற்றும் இந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இலங்கைக்கு வந்து அவர்களது திரைப்படங்களின் பாடல்களை ஒளிபரப்புவதற்காக ஒரு அலைவரிசையினை தேசிய வானொலி சேவையிடம் பல நிபந்தனைகளுக்கு மத்தியில் வாங்கினார்கள்.
இந்தியாவிற்கு மட்டுமன்றி முழு ஆசியாக் கண்டத்திலும் பொலிவூட் இசைகள் கேட்கக் காரணமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் என்பது பலரும் அறிந்திராத உண்மை.
முன்னாள் பணிப்பாளர் மர்ஹும் ஜமால்தீன் அவர்கள் இந்தியாவில் இருந்த நாட்களின் போது காஷமீர் மக்களுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்ட அத்துமீறல்கள், அடக்குமுறைகள் எல்லாம் அவரின் உள்ளத்தினுள் ஆழமாய் பதிந்தது.
அந் நாட்களில் இந்திய பிரதமர் கஷ்மீர் தொடர்பான ஐ.நா.வின் தீர்மானம் பொருத்தமற்றது என்று கூறியதற்கு மர்ஹும் ஜமால்தீன் அவர்கள் மறுப்பு தெரிவித்து ஓர் புத்தகம் ஒன்றை வெளியிட்டார்.
அன்றுதான் இந்த கஷ்மீர் மூவ்மண்ட் அமைப்பு ஆரம்பமாகியது. கருப்புத் தினம் மற்றும் ஒற்றுமை நாள் ஆகிய தினங்கள் கஷ்மீரில் முக்கிய தினங்களாக இன்றுவரை அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில் இருந்துகொண்டு கஷ்மீருக்காக குரல் கொடுத்து வந்த மர்ஹும் ஜமால்தீன் அவர்கள் காஷ்மீர் ஆதரவு கூட்டம் ஒன்று மஹாவெலியின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் வாசுதேவ நாநயக்கார போன்ற இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சனிக்கிழமை மாலை நேரத்தில் இந்த கூட்டம் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் வியாழக்கிழமை ஒரு தொலைபேசி அழைப்பு அவருக்கு வந்தது.
குறித்த தொலைபேசி அழைப்பை மஹாவெலி நிர்வாகசபையின் தலைவர் மேற்கொண்டு உங்களது இந்த கூட்டத்தைப் பற்றி இந்தியாவின் இரகசிய சேவையாட்கள் இந்திய உயர் ஸ்தானிகரிடம் தப்பான முறைப்பாடுகளை தெரிவித்துள்ளார்கள் எனவும் தாங்கள் ஆர்ப்பாட்டங்களை நடாத்தவுள்ளதாக பொய்யான தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள் எனவும் தெளிவுபடுத்தினார்.
அந்த கூட்டத்தை தடுக்க இந்தியா கடும் திட்டங்களை தீட்டியதுடன் மர்ஹூம் ஜமால்தீன் அவர்களுக்கு பல நெருக்கடிகளையும் கொடுத்தது.
குறித்த நிகழ்ச்சிக்கு வருவோரை வை.எம்.எம்.ஏ. மண்டபத்திற்கு வரும் படி கூறுமாரு மகனிடம் சொல்லிவிட்டு ஜமால்தீன் அவர்கள் நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்றி பெரும் சவாலுக்கும் குறுக்கீடுகளுக்கு மத்தியிலும் குறித்த நிகழ்வை நடத்தி முடித்து வெற்றியும் கண்டார்.
இவ்வாறான பெரும் முயற்சிக்கும் அர்ப்பணிப்பிற்காகவும் பாகிஸ்தானுக்கான சேவைகள் விருதான “சிதாரா ஐ இம்தியாஸ்” எனும் விருது 2016ல் பாகிஸ்தான் இஸ்லாமாபாதில் வைத்து அந்நாட்டு ஜனாதிபதியால் மர்ஹும் ஜமால்தீன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
வெளிநாட்டொருவரால் காஷ்மீர் மக்களுக்காக ஒலிக்கப்பட்ட மிக முக்கிய குரல் என்றால் அது மர்ஹும் ஜமால்தீன் அவர்களின் குரல் என்றால் மிகையாகாது.
ஒக்டோபர் 27ம் திகதி கறுப்புத் தினமும் பெப்ரவரி 5ம் திகதி ஒருமைப்பாட்டு தினமும் வருடாந்தம் காஷ்மீரில் நடாத்தப்படுகின்றது. இங்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாது முஸ்லிம் அல்லாதவர்களும் வருகை தருவதால் அந்த தினம் மேலும் சிறப்பு பெறுகிறது.
காஷ்மீர் மக்கள் மீது மர்ஹூம் ஜமால்தீன் அவர்கள் வைத்த அன்பும் பற்றும் பல சந்தர்ப்பங்களில் அவருக்கு பல கஷ்டங்களையும் சோதனைகளையும் கொடுத்திருந்தாலும் அவரின் ஆத்மார்த்தமான சேவையை பாகிஸ்தான் அரசாங்கம் மறந்துவிடவில்லை.
மர்ஹூம் ஜமால்தீன் அவர்களின் சேவையை நினைவுகூரும் வகையில் அவரின் நினைவு சின்னமாக பாகிஸ்தான் அரசாங்கம் இலங்கையிலுள்ள தனது பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் அன்னாரின் பெயரில் வாசிகசாலை ஒன்றை நிறுவியுள்ளமையானது எருக்கலம்பிட்டி மண்ணுக்கும் மக்களுக்கும் என்றென்றும் மகிழ்ச்சி தரும் அழியாச்சின்னமாகும்.
காஷ்மீர் மக்களுக்காக அன்று ஒலித்த மர்ஹூம் ஜமால்தீன் அவர்களின் குரல் என்றென்றும் அம்மக்களுக்காக ஒலித்துக்கொண்டே இருக்கும்.
மக்களின் துயர் துடைக்க தன்னையே அர்ப்பணித்த இம் மாமனிதர் மர்ஹூம் ஜமால்தீன் அவர்களுக்காக நாமும் இரு கரம் ஏந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்வோமாக….
தாய் மண்ணின் மான்பை பறை சாற்றிய மர்ஹூம் மொஹிதீன் கப்புடையார் முஹம்மது ஜமால்தீன் அவர்களை நினைவுகூருவதில் பெருமிதம் கொள்கிறது எருக்கலம்பிட்டி.
தகவல்: M.A.C. முகம்மது கமால்தீன் (JP)