ஜூட் சமந்த
வெள்ளத்தால் சேதமடைந்த மின் சாதனங்களை இலவசமாக பழுதுபார்க்கும் வேலைத்திட்டம் தற்போது சிலாபம், ராஜகடலுவவில் நடைபெற்று வருகிறது.
மாரவில தொழிற்பயிற்சி ஆணையத்தின் ஆலோசகராகப் பணிபுரியும் திரு. சுஜித் ஹேரத் இந்த அற்புதமான மனிதநேய பணியை தொடங்கியுள்ளார்.
அவரது வீட்டில் இலவசமா பழுதுபார்க்க வெள்ளத்தால் சேதமடைந்த ஏராளமான மின் சாதனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை ஒவ்வொன்றாக சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“சமீபத்தில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளத்தில் வீடுகளில் இருந்த மின்சாதனங்கள் சேதமடைந்துள்ளன. எனவே நான் கற்றுக்கொண்டதைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று நினைத்து, இந்தப் பணியைத் தொடங்கினேன்” என திரு. சுஜித் ஹேரத் தெரிவித்தார்.
இதுவரை, ஏராளமான மின்சாதனங்களை இலவசமாக பழுதுபார்த்துள்ளதாகவும், தான் தற்போது வசிக்கும் ஆரச்சிகட்டுவ-ராஜகடலுவ பகுதியில் உள்ள மக்கள் தனது வீட்டுக்கு வந்து அவர்களது மின்சாதனங்களை பழுதுபார்க்க ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்த அவர், அதற்காக தான் எவ்வித கட்டணமும் வசூலிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏதேனும் குழு அல்லது தன்னார்வ அமைப்பு இதற்கான வேலையை ஏற்பாடு செய்தால், அந்த கிராமத்திற்கு சென்று இந்த வேலையைச் செய்ய முடியும் எனவும், நான் பணிபுரியும் மாரவில தொழிற்பயிற்சி ஆணையத்தில் தற்போது கல்வி பெற்று வரும் மற்றும் கல்வியை முடித்த மாணவர்களின் ஆதரவையும் என்னால் பெற முடியும்,” என்று திரு. சுஜித் கூறியுள்ளமை பலரையும் வியக்கவைத்துள்ளது.
கடந்த கோவிட் தொற்றுநோய் காலத்தில், திரு. சுஜித் ஹேரத், காலால் இயக்கப்படும் கை கழுவும் இயந்திரங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் மற்றும் எழுதுபொருட்களை கிருமி நீக்கம் செய்யக்கூடிய இயந்திரங்களையும் தயாரித்து அறிமுகப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.




