இலங்கை கிரிக்கெட்டினால் தேசிய உயர் செயல்திறன் நிலையத்தில் (National High Performance Center) புதிய உள்ளகப் பயிற்சிக் கூடம் திறந்து வைக்கப்பட்டது
தேசிய உயர் செயல்திறன் நிலையத்தில் (National High Performance Center) புதிய உள்ளகப் பயிற்சிக் கூடத்தை இலங்கை கிரிக்கெட் நேற்று (டிசம்பர் 15) திறந்து வைத்தது. இது நவீன வசதிகளுடன் கூடிய உள்ளகப் பயிற்சி விளையாட்டரங்கமாகும்.
இந்த விளையாட்டரங்கம் சர்வதேச தரத்திற்கு அமைய அமைக்கப்பட்டுள்ளதுடன், அதிநவீன, ஏழு விக்கெட்டுகளைக் கொண்ட உள்ளக கிரிக்கெட் ஆடுகள வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் சுழற்பந்து வீச்சுக்காக இரண்டு விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சுக்காக இரண்டு விக்கெட்டுகளும், பொதுப் பயன்பாட்டிற்காக மூன்று விக்கெட்டுகளும் அடங்கும்.
மேலும், பல்வேறு காலநிலை நிலைமைகளின் கீழ் தடையின்றி பயிற்சி அளிப்பதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உள்ளகப் பயிற்சி வளாகம், தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், ‘ஏ’ அணிகள், வளர்ந்து வரும் அணிகள், அத்துடன் 19, 17 மற்றும் 15 வயதுக்குட்பட்ட தேசிய அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர் வீராங்கனைகளால் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வாவின் அழைப்பின் பேரில், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் கௌரவ அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் பங்குபற்றலுடன் இந்த உள்ளகப் பயிற்சிக் கூடம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.





