ஜூட் சமந்த
வாக்குவாதம் முற்றியதால் ஏற்பட்ட தாக்குதலில் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாரவில, மோதரவெல்ல பகுதியைச் சேர்ந்த ரெக்ஸ் ஜெரார்ட் நிஷாந்த பீரிஸ் (வயது 54) என்ற மீனவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் 1990 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மாரவில ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்த நபர் நேற்று 18 ஆம் தேதி மாலை உயிரிழந்தார்.
மது அருந்திய பின்னர் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாகவும், இதன் விளைவாக போத்தல் மற்றும் கதவு கைப்பிடியால் தாக்குதல் நடந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


