ஜூட் சமந்த
பெற்றோரின் அரவணைப்பில் இருந்த 15 வயது நிரம்பிய பள்ளி மாணவி ஒருவரை கடத்தியதற்கு துணை போன 19 வயது இளைஞரை கைது செய்துள்ளதாக மாதம்பே போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாதம்பே – கலஹிடியாவ பகுதியைச் சேர்ந்த ஒருவரையே போலீசார் இவ்வாறு கைது செய்துள்ளனர். சிறுமியை கடத்த பயன்படுத்தியதாகக் கூறப்படும் சிறிய ரக லாரியும் போலீசாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருவதுடன், கடந்த 18 ஆம் தேதி காலை பாடசாலையில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இருப்பினும், பள்ளியில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ளவில்லை என்று சிறுமியின் தாயார் தெரிந்துகொண்டார்.
அதனை தொடர்ந்து போலீசுக்கு விரைந்த மாணவியின் தாய், மாதம்பே, பொத்துவில பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞருடன் தனது மகள் காதல் உறவில் இருந்ததாகவும், தற்போது இவ்விருவரும் காணவில்லை என்றும் மாணவியின் தாய் மாதம்பே போலீசில் புகார் அளித்துள்ளார்.
விசாரணை நடத்திய போலீசார், சிறுமியுடன் காணாமல் போன இளைஞனின் நண்பருக்கு சொந்தமான ஒரு சிறிய லாரியை, 18 ஆம் தேதி காலை அவர் படித்து வந்த பாடசாலைக்கு அருகில் மீட்டுள்ளனர்.
சிறுமியும் அவரது காதலன் என்று கூறப்படும் இளைஞனும் ஏற்கனவே காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மாதம்பே போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


