குறிப்பட்ட ஒரு சிலருக்கு மாத்திரம் வசதி வாய்ப்புகளை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையல்ல. மக்களுக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்தக்கூடிய விதத்தில் அரசாங்கம் பொருளாதார முகாமைத்துவத்தை முன்னெடுத்து வருகின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வட மாகாண மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், இன்று டிசம்பர் 21 ஆம் திகதி கிளிநொச்சி, இரணைமடு இராணுவ முகாமின் ‘நெலும் பியஸ’ மண்டபத்தில் நடைபெற்ற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு 2026 ஆம் ஆண்டில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கும் ஏனைய அரச உத்தியோகத்தர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்வதற்கும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும், அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்திற்கு அமைச்சுகளிடமிருந்தும் மாகாண மட்டத்திலிருந்தும் சிறந்த ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன, மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கூட்டுறவு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சிறீபவானந்தராஜா, ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் ரொஷன் கமகே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
06 பாடப் பிரிவுகளில் மாவட்டங்களில் 1-10 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





