தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2025 இன் நிறைவு விழா நேற்று (21 ஆம் திகதி) நடைபெற்றது. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேன்னாயக்க மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் தலைமையில் இவ்விழா இடம்பெற்றது.
26 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் இப்போட்டிகளில் பங்கேற்றனர். இதில் கண்டி மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. கம்பஹா மாவட்டம் இரண்டாம் இடத்தையும், கொழும்பு மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
விளையாட்டு விழாவின் சிறந்த வீராங்கனையாக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த சயுரி லக்ஷிகா மென்டிஸ் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த வீரராக கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த K.A.D. மல்ஷான் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கு யமஹா (YAMAHA) நிறுவனத்தின் அனுசரணையுடன் தலா ஒரு மோட்டார் சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன.





