சிலாபம் மற்றும் நாத்தாண்டியா பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கிய ISRC Sri Lanka
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம் மாவட்டத்தில் உள்ள சிலாபம் மற்றும் நாத்தாண்டியா பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று 23 டிசம்பர் 2025 அன்று ISRC Sri Lanka அமைப்பினால் மனிதாபிமான அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தது.
இத்திட்டத்தின் கீழ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் மற்றும் நாத்தாண்டியா பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 500 குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகளது பராமரிப்பு நிலையங்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றிற்கு 1,000 படுக்கை விரிப்புகள் (Blankets) மற்றும் 1,000 போர்வைகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய வெள்ளப் பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டு, இடம்பெயர்வு மற்றும் குறைபாடான வாழ்விட நிலைகளில் வாழும் நலிவடைந்த சமூகங்களுக்கு உதவுவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் வசிக்கும் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, பாகுபாடற்ற மனிதாபிமான உதவிகள் செய்யப்பட்டன.
இந்நிவாரணத் திட்டத்திற்கு குவைத் நாட்டைச் சேர்ந்த தனவந்தர்கள் வழங்கிய நிதி உதவியுடன், அல் புன்யான் மற்றும் தன்மியா ஆகிய அமைப்புகள் அணுசரனை வழங்கின. இது இலங்கையின் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குவைத் நாட்டின் உறுதியான மனிதாபிமான ஒத்துழைப்பை வெளிக்காட்டுகிறது.
இந்நிவாரணப் பொருட்கள் விநியோகம், பிரதேச செயலகங்கள் உட்பட சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் முறையான ஒத்துழைப்பினால் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ISRC Sri Lanka பிரதிநிதிகள், பேரிடர் காலங்களில் மனிதாபிமான உதவிகளூடாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, உடனடி நிவாரணத்தை வழங்கி களப்பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




