ஈரானில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு நடைபெற்று வரும் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில் அமெரிக்கா தலையிட நேரிடும் என எச்சரித்துள்ளது.
ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக அரசுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் தற்போது பெரும் கலவரமாக உருவெடுத்துள்ளது. போராட்டக்காரர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் வகையிலும், அங்கு நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கும் வகையிலும் கடந்த 8ம் தேதி முதல் நாடு முழுவதும் இணையதளம் மற்றும் தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்தி சேவையான தினகரன் ஊடகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் வரலாற்றிலேயே மிக மோசமான இணையத் தடையாகவும், தகவல் தொடர்பற்ற நிலையாகவும் இது கருதப்படுவதாக குறித்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, ‘வெளிநாட்டுச் சக்திகளின் தூண்டுதலின் பேரில் செயல்படும் நாசகாரர்கள் மற்றும் தீவிரவாதிகள்’ என்று ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளதுடன், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. கடந்த 8ம் தேதி மற்றும் 10ம் தேதிக்கு இடைப்பட்ட 48 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் தெஹ்ரான் மற்றும் ராஷ்ட் உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் குண்டடிபட்ட உடல்களால் நிரம்பி வழிகின்றன.
இதற்கிடையே, ‘அமைதியான முறையில் போராடும் மக்களைக் கொல்வதை ஈரான் அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் அமெரிக்கா தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்காது’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்தப் பதற்றமான சூழல் காரணமாக துருக்கி மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் விமான நிறுவனங்கள் ஈரானுக்கான விமான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இந்திய செய்தி சேவையான தினகரன் ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




