‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாரிய அழிவுகளுக்குப் பின்னர், கொழும்பு முதல் புத்தளம் – பாலவி வரையிலான ரயில் சேவைகள் நாளை (19) முதல் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் நாட்டைத் தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் ரயில் பாதைகள் கடுமையாக சேதமடைந்திருந்தன. இதில் நீர்கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் பாதை மிக மோசமான பாதிப்புக்குள்ளானது.
குறிப்பாக, பத்துளுஓயா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக சுமார் 200 அடிக்கும் அதிகமான ரயில் பாதை முற்றாக அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தது.
ரயில்வே திணைக்களத்தின் பாதை பராமரிப்புப் பிரிவினர் கடந்த சில வாரங்களாக இந்தப் பாதையை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்:
இதன் முதற்கட்டமாக மஹவெவ பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்பட்டு, கடந்த சில நாட்களாக சிலாபம் வரை ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து பத்துளுஓயா மற்றும் ஏனைய பகுதிகளில் சேதமடைந்திருந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நேற்று (18) வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.
53 நாட்களுக்குப் பின் மீண்டும் சேவை
தொடர்ச்சியான சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து, சுமார் 53 நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த ரயில் சேவை இன்று முதல் பரீட்சார்த்தமாகவும், நாளை (20) முதல் முழுமையான அட்டவணைப்படியும் இயங்கவுள்ளது.
இந்த ரயில் பாதை மீளத் திறக்கப்படுவதன் மூலம் புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மீண்டும் இலகுவான போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.



