ஜூட் சமந்த
ஆரச்சிக்கட்டுவ – உடப்பு மீன்பிடி கிராமத்தின் கடற்கரைப் பகுதி மீண்டும் ஒருமுறை மிகக் கடுமையான முறையில் கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றது.
கடந்த ஜனவரி 11 ஆம் திகதி கடலில் ஏற்பட்ட ஒருவித மாற்றத்தைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தமது மீன்பிடித் தொழிலை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் மாவட்டத்தின் ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள உடப்பு கிராமம் “குட்டி யாழ்ப்பாணம்” (පුංචි යාපනය) என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ் மக்களாக இருப்பதோடு, அவர்கள் யாழ்ப்பாணப் பிரதேசத்துடன் நெருங்கிய உறவினர்களாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்
இக்கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடியாகும். மேற்கே உள்ள கடலும், கிழக்கே உள்ள முந்தலமை கலப்பும் இவர்களின் பொருளாதாரத்தின் முக்கிய மையங்களாக உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்பும் இங்கு கடல் அரிப்பு ஏற்பட்டபோது, ஊடகங்களின் வெளிப்படுத்தலைத் தொடர்ந்து அரசாங்கம் கடல் அரிப்பைக் கட்டுப்படுத்த சில கற்பாரைகளை (Rock barriers) இட்டிருந்தது.
தற்போது சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரை அரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் 02 மீன்பிடி வாடிகள் முற்றாக கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. அத்துடன் கடற்கரை ஓரத்தில் இருந்த மின்சாரக் கம்பங்களும் சரிந்து விழுந்துள்ளன.
கடல் தரைப்பகுதியை நோக்கி ஊடுருவுவதால் மக்கள் வீடுகளில் இருக்க அச்சப்படுகின்றனர். முன்னதாக இடப்பட்ட கற்பாரைகளுக்கு அருகிலேயே தற்போது அரிப்பு ஏற்படுவதால், அந்தக் கற்பாரைகளும் கடலுக்குள் அடித்துச் செல்லப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் படகுகளை கரையில் நிறுத்துவதில் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
சுமார் 500 மீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு தற்போது கடலுக்குள் காவு கொள்ளப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தில் தலையிடாவிட்டால், உடப்பு கிராமம் இலங்கையின் வரைபடத்திலிருந்தே அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக கிராம மக்கள் மிகுந்த அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.





