1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலை, போர்ச் சூழல் காரணமாக 1985 ஆம் ஆண்டு மூடப்பட்டு, தற்போது, சுமார் 40 வருடங்களின் பின்னர் இதனை மீண்டும் இயக்குவதற்கான அடிக்கல் இன்று ஜனவரி 21 அன்று நடப்பட்டது,.
அரசாங்கம் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதுடன், அடுத்த 9 மாதங்களில் அடிப்படை உட்கட்டுமானங்கள் அமைக்கப்படும் என்றும், அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை (PPP) மூலம் மொத்தம் 6.3 பில்லியன் ரூபா முதலீட்டில் 30 மாதங்களில் தொழிற்சாலை முழுமையாக இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொழிற்சாலை முன்பு குளோரின், கொஸ்டிக் சோடா மற்றும் ஹைதரோ குளோரிக் அமிலம் போன்றவற்றை உற்பத்தி செய்தது.
கடந்த 40 வருடங்களாக இவை இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இனி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டு, உபரி உற்பத்தி மூலம் ஏற்றுமதி செய்து டொலர் உழைக்கும் மையமாக பரந்தன் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வடக்கில் அமையவுள்ள மூன்று பாரிய முதலீட்டு வலயங்களில் ஒன்று பரந்தனில் அமையவுள்ளமையால், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் மக்கள் நுகர்வுத் தேவைகளுக்குப் பணம் அனுப்புவதை விட, இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் பணியாளர்களால் அடிக்கல் நாட்டப்பட்டமை ஒரு உணர்வுபூர்வமான விடயமாக அமைந்தது. இதில் அமைச்சர்களான சுனில் ஹந்துன்நெத்தி, இ.சந்திரசேகர் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




