அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் வனாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள வில்லு அமைப்பு (சிறிய குளங்கள்) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரபாகரன் தெரிவித்தார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள, ஏழு வில்லு அமைப்புகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதோடு, சின்ன நாகவில்லு பகுதியில் சுமார் 76 ஏக்கர் நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளதாக பிரதேச செயலாளர் இன்று ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு தெரிவித்தார்.
வனாத்தவில்லு பிரதேசத்திற்கு இன்று மேற்கொண்ட விசேட கள ஆய்வு நடவடிக்கையில் பங்குகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஈ நியூஸ் பெஸ்ட் ஊடகத்திற்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
சின்ன நாகவில்லு பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் மேட்டு நிலங்களாக இருப்பதால், தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதில் பிரதேச மட்டத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் சவாலாக அமைந்துள்ளன.
வனாத்துவில்லு, சுவர்ணமாலி வில்லுவ, சீயகலுவ மற்றும் ஜூல் வில்லுவ ஆகிய பகுதிகளில் உள்ள வில்லு அமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விவசாய நிலங்களைப் பொறுத்தமட்டில், சுமார் 230 ஏக்கர் தென்னை காணிகளும், அதே அளவிலான 230 ஏக்கர் முந்திரி காணிகளும் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் மாவட்டச் செயலாளர் ஊடாகத் தகவல் வழங்கப்பட்டு, இன்று பல திணைக்களங்களின் உயர்மட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் விசேட கள ஆய்வு நடத்தப்பட்டது.
குறித்த ஆய்வு நடவடிக்கையில் மகாவலி அதிகாரசபை, காணி மீட்புத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாய சேவைகள் திணைக்களம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச செயலாளர், மத்திய மற்றும் மாகாண சுற்றாடல் அதிகாரசபைகள், பிரதேச சபை செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாயத் திணைக்கள அதிகாரிகள் பங்குகொண்டனர்.
இதன் போது, தேங்கியுள்ள நீரை வெளியேற்றுவதற்குத் தேவையான தற்காலிக தீர்வுகளை உடனடியாக மேற்கொள்வது குறித்தும், எதிர்காலத்திற்காக நீண்டகால தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக வனாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரபாகரன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






