சமூக ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய விரிவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறிப்பாக, சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பரங்களால் மக்கள் அவதிப்படுவதைக் கட்டுப்படுத்த இத்தகைய சட்டவாக்கம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
தற்போதுள்ள சட்டங்களின் கீழ், ஆயுர்வேத தயாரிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பான விளம்பரங்களை ஒழுங்குபடுத்த முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்படும் ஆயுர்வேத பொருட்கள் தொடர்பாக இதுவரை பண மோசடி புகார்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், புகார் அளிக்கப்பட்டால் ஒழுங்குமுறை சபையினால் நிறுவப்பட்ட விசாரணை குழுக்கள் மூலம் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார். சிதைக்கப்பட்ட (distorted) சமூக ஊடக விளம்பரங்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சில பொருட்கள் மருந்துகள் என்ற பெயரில் விற்கப்படுவதால் அவற்றைப் பயன்படுத்தும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்கள் பாதிக்கப்படும் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான முறையான சட்டம் இன்னும் இலங்கையில் இல்லை என்பதை அமைச்சர் ஒப்புக்கொண்டார். அத்தகைய புதிய சட்டங்கள் இயற்றப்பட்டால் மட்டுமே பல சிக்கல்களை முழுமையாகக் கையாள முடியும் என்றும், அதுவரை கிடைக்கும் புகார்களின் அடிப்படையில் தற்போதுள்ள சட்டங்களைப் பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ‘1818’ என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக சுமார் 4,500 தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன் விளைவாக, போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 400 ஊழல் நிறைந்த பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


