சர்வதேச சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டு வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
காவல்துறை மா அதிபர் (IGP), இந்திய அரசாங்கம், இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் இந்திய பாதுகாப்புப் பிரிவினருடன் நடத்திய நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி, சந்தேக நபர் 24.01.2026 அன்று மாலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மேலதிக விசாரணைகளுக்காக கெசல்வத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் கெசல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஆவார். அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன
2015யில் கெசல்வத்தை பொலிஸ் பிரிவில் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலை செய்தமை, 2018யில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவத்திற்கு உதவியமை மற்றும் உடந்தையாக இருந்தமை, 2021யில் மட்டக்குளி பொலிஸ் பிரிவில் ஒருவரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியமை, 2021யில் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்தமை, கெசல்வத்தை, வெள்ளவத்தை மற்றும் புளுமெண்டல் பொலிஸ் பிரிவுகளில் கொள்ளை மற்றும் போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.
அந்த வகையில் தற்போது, கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரின் (DIG) மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



