இலங்கையின் புவியியல் அமைப்பில் தனித்துவம் வாய்ந்த இடமாகத் திகழும் கற்பிட்டி கண்டகுழி கலப்புப் பகுதி, தற்பொழுது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும் நீர்ச்சறுக்கல் (Kite Surfing) மையமாக மாறியுள்ளது.
இலங்கையில் கற்பிட்டியில் மாத்திரமே இந்த நீர்ச்சறுக்கல் விளையாட்டு மேற்கொள்ளப்படுவது இதன் மிக முக்கியமான சிறப்பம்சமாகும்.
கற்பிட்டியில் இந்த நீர்ச்சறுக்கல் விளையாட்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக, கண்டகுழி கலப்புப் பகுதி ஆழமற்று காணப்படுவதால், நீர்ச்சறுக்கலில் ஈடுபடுபவர்களுக்கு இது மிகவும் பாதுகாப்பானதாகவும், விளையாட்டை எளிதாகக் கற்றுக்கொள்ள ஏதுவான இடமாகவும் அமைகின்றது. எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் விளையாடுவதற்கு இது ஒரு மிகச் சிறந்த இடமாக சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்ச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபடுவதற்காக அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ், ஆஸ்திரியா, கனடா, சுவிஸ்லாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் கற்பிட்டிக்கு வருகை தருகின்றனர்.
இவ்வாறு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கைப் பயிற்றுவிப்பாளர்களே முறையான பயிற்சிகளை வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் என்ற குறுகிய காலத்திற்கு இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தினமும் இந்த நீர்ச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்ந்துவிட்டுத் தமது நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.
இலங்கையிலுள்ள இவ்வாறான தனித்துவம் வாய்ந்த சுற்றுலா மையங்களை முறையாக மேம்படுத்துவதன் மூலம், நாட்டின் அந்நியச் செலாவணியை பெருமளவில் ஈட்ட முடியும். அத்துடன், இத்துறை சார்ந்த வளர்ச்சி உள்ளூர் மக்களுக்கு அதிகளவிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும்.
எனவே, கற்பிட்டி போன்ற இடங்களைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவது இலங்கையின் சுற்றுலாத் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பலன் அளிப்பதாக அமையும்.




