ஜூட் சமந்த
ஆழ்கடலில் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ‘தோகை இறகு சுறாக்கள்’ (Thresher Sharks/පොල් කොළ මෝරු) ஒரு தொகுதியை பலநாள் படகு ஒன்றின் மூலம் நாட்டிற்கு கொண்டு வந்த 7 மீனவர்கள் கடலோர பாதுகாப்புப் படை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை கடந்த 24 ஆம் திகதி வென்னப்புவ, வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்களிடமிருந்து 826 கிலோ கிராம் மற்றும் 200 கிராம் எடையுள்ள தோகை இறகு சுறாக்களை கடலோர பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாரவில மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசேட மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தின் படி, தோகை இறகு சுறாக்களை வேட்டையாடுவது அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்களும் கைப்பற்றப்பட்ட சுறாக்களும் மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக வெல்லமங்கர மீன்பிடிப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


