ஜூட் சமந்த
மாதம்பை மற்றும் கொஸ்வத்தை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கள் நேற்று 25 ஆம் திகதி இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நிகழ்ந்துள்ளன.
நேற்று 25 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் மாதம்பை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்தவர் பிங்கிரிய – தலுப்பத்த பகுதியைச் சேர்ந்த லொகுபாலசூரியகே இந்துனில் கெலும் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஆகப் பணியாற்றுபவர் எனத் தெரியவந்துள்ளது. இவர் தற்போது சிகிச்சைக்காக மாதம்பை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே நாள் அதிகாலை 1.00 மணியளவில் கொஸ்வத்தை ஜய மாவத்தை பகுதியில் மற்றொரு விபத்து நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கான்கிரீட் தூண் ஒன்றில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த லுனுவில – ஹால்தடுவன பகுதியைச் சேர்ந்த கருணாசாரிகே அமித் அசங்க என்பவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் பொலிஸ் விசேட பணியகத்தின் தலைமையகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றுபவர் எனத் தெரியவந்துள்ளது. மேலும், விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிவந்துள்ளது.
இந்த விபத்துக்கள் குறித்து மாதம்பை மற்றும் கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


