இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்க ஐந்து அம்ச தொழிற்சங்கப் போராட்டம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிரடித் தீர்மானம்
இலங்கையின் அரச வைத்தியசாலைக் கட்டமைப்பில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், முறையான பணிச்சூழலை வலியுறுத்தியும் இன்று (26) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையானது ஐந்து பிரதான வழிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னெடுக்கப்படவுள்ள ஐந்து அம்ச நடவடிக்கைகள்:
1. மருந்துப் பரிந்துரைகளை நிறுத்துதல்: கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் (OPD) மருந்துகள் இல்லாத பட்சத்தில், நோயாளர்கள் அவற்றை வெளியில் உள்ள மருந்தகங்களில் கொள்வனவு செய்வதற்காக மருந்துப் பரிந்துரைச் சீட்டுகளை (Prescription) வழங்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2. ஆய்வுகூடப் பரிசோதனைகளைத் தடுத்தல்: வைத்தியசாலைக் கட்டமைப்பிற்குள் மேற்கொள்ள முடியாத ஆய்வுகூடப் பரிசோதனைகளை, தனியார் வைத்தியசாலைகள் அல்லது வெளி ஆய்வுகூடங்களில் செய்து கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்காமை.
3. புதிய பிரிவுகளுக்கு முட்டுக்கட்டை: அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை முறையாக வழங்கப்படாத பட்சத்தில், வைத்தியசாலைகளில் புதிய சிகிச்சை பிரிவுகளை ஆரம்பிக்க ஒத்துழைப்பு வழங்காமை.
4. அரசியல் முகாம்களைப் புறக்கணித்தல்: அரசியல் நோக்கங்களுக்காக மற்றும் அரசியல் தேவைகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் அல்லது கிளினிக்குகளில் கலந்துகொள்ளாமை.
5. பணிப்பகிஷ்கரிப்பு எச்சரிக்கை: கிளினிக் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் நோயாளிகளைப் பரிசோதிக்கும் போது, வைத்தியருக்கு உதவியாக உதவி உத்தியோகத்தர் ஒருவரை வழங்கத் தவறினால், வைத்தியர்கள் அந்த இடத்திலிருந்து கடமையிலிருந்து விலகிச் செல்வார்கள்.
அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து விளக்கமளித்த வைத்தியர் சமில் விஜேசிங்க, “நாங்கள் வேலை செய்யாமல் இருப்பதற்காக இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவில்லை; வேலை செய்யக்கூடிய முறையான சூழலை வழங்குமாறு கோரியே இதனை முன்னெடுக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
தேவையான மருத்துவ வசதிகளை வழங்காமல் இலவச சுகாதார சேவையைச் சீர்குலைக்கும் பொறுப்பைச் சுகாதார அமைச்சும், அரசாங்கமுமே ஏற்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். சுகாதாரக் கட்டமைப்பு அல்லது நோயாளர் பராமரிப்பு சேவைகள் இதனால் பாதிப்படைந்தால் அதற்கு அமைச்சும் அமைச்சருமே முழுப் பொறுப்புக் கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தொடர் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறும் மத்திய செயற்குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் சுகாதாரத் துறையில் நிலவும் நெருக்கடி நிலை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


