மாங்குளம் மக்களின் சுகாதாரக் கனவை நனவாக்கும் புதிய முன்னெடுப்பு: மருத்துவர் மற்றும் பணியாளர்களுக்கான விடுதிகள் திறப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், மக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவையை உறுதிப்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக, மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகள் 2026 ஜனவரி 27 செவ்வாய்க்கிழமை அன்று உத்தியோகபூர்வமாகப் பாவனைக்குக் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், சுகாதாரத் துறையினரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். வடக்கு மாகாணத்திற்கு ஏனைய மாகாணங்களிலிருந்தே பெரும்பாலான சுகாதார அதிகாரிகள் வருகை தருகின்றனர் எனக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை முறையாகப் பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலமே, எமது மக்களுக்கான முழுமையான சேவையை அவர்களிடமிருந்து பெற்றுக்கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
இந்தத் திட்டமானது வட மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டச் செயலராகத் தான் பணியாற்றிய காலத்தில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு இராணுவம் வழங்கிய ஒத்துழைப்பை ஆளுநர் இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
அதேபோன்று, தற்போதைய புனரமைப்புப் பணிகளிலும் இராணுவப் பொறியியல் பிரிவினர் வழங்கிய மனிதவலுப் பங்களிப்பினால், சுமார் 6 மில்லியன் ரூபா வரையிலான அரச நிதி சேமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உரிய காலத்தில் பணிகளை நிறைவு செய்தமைக்காக இராணுவத்தினருக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
வட மாகாண சபையின் நிதிப் பங்களிப்பில் மருத்துவர் விடுதி, தாதியர் விடுதி, துணை மருத்துவ ஆளணியினர் விடுதி, சாரதி விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் ஆகியன புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக, 8 அறைகள், சமையலறை மற்றும் உணவருந்தும் அறை உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட தாதியர் விடுதி, நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் மற்றும் சாரதி விடுதி என்பன மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரதீப் குலதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மருத்துவமனை அத்தியட்சகர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகள் மாங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகளை ஈடுசெய்வதில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




