கரைத்தீவு, சின்ன நாகவில்லு பகுதியில் இரண்டு மாதங்கள் கழிந்தும் தேங்கி நிற்க்கும் வெள்ள நீர் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வழிந்தோடாமல் தேங்கி நிற்கும் வெள்ள நீரை மஹாவலி அதிகாரசபையின் நீர் முகாமைத்துவச் செயலாளரான நளந்த தனபால உள்ளிட்ட விஷேட குழுவினர், இடர் மேலாண்மை பிரிவின் (DMC) அழைப்பின் பேரில் இப்பகுதிகளுக்கு அண்மையில் வருகை தந்து பார்வையிட்டார்.
அவர் சுமார் ஏழு ‘வில்லு’களைக் கொண்ட இரண்டு இடங்களுக்கு நேரில் சென்றதுடன், முதலாவதாக சின்ன நாகவில்லு பகுதியை பார்வையிட்ட போது, அங்குள்ள குளத்திற்கு நீரை வடிந்தோடச் செய்யுமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்தனர்.
சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனம் (IMI) ஏற்கனவே ட்ரோன் (Drone) கேமராக்கள் மூலம் இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாகவும், அந்த அறிக்கைகள் மற்றும் வரைபடங்கள் கிடைத்தவுடன் நிலையான தீர்வை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து ஜூல் வில்லுவ, அக்கர சீய மற்றும் சுவர்ணமாலி வில்லுவ ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு ‘எல்லங்க’ நீர் முறைமை போன்ற தொகுதியைப் குறித்த குழுவினர் பார்வையிட்டனர்.

தற்போது, இடர் மேலாண்மை மையம் மற்றும் முப்படைகள் இணைந்து இப்பகுதிக்கு தற்காலிக நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், தொழில்நுட்ப நிறுவனங்கள், அரசியல் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளருடன் இணைந்து அனைவருக்கும் நியாயமான நீண்ட காலத் தீர்வை விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
சின்ன நாகவில்லு பகுதியில் ஏற்பட்ட புயலைத் தொடர்ந்து, மேலதிக நீர் வெளியேற முடியாமல் தேங்கியுள்ள பிரச்சினை முதன்மையாகக் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக பிரதேச செயலாளர் ஊடாக மாவட்ட இடர் மேலாண்மை பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் மூன்று தடவைகள் கள ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இப்பகுதியின் நீர்ப்பரப்பைத் துல்லியமாக அடையாளம் காண்பதற்காக, சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் (IMI) உதவியுடன் ட்ரோன் (Drone) வரைபடங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், கொழும்பில் உள்ள முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களான மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் நில மேம்பாட்டு கூட்டுத்தாபனம் போன்றவை பிரதேச அதிகாரிகளுடன் Zoom தொழில்நுட்பம் வாயிலாக இணைந்து ஆலோசனைகளை நடத்தின.

தொழில்நுட்ப ரீதியாக, இப்பகுதி ஒரு ‘வில்லு’, அதாவது ஒரு தனி வடிநிலம் (Basin) போன்ற அமைப்பாகும். எனினும், பண்டைய நீர்ப்பாசனத் தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, இதனை ஒரு ‘எல்லங்க’ (நீர் வரிசை முறைமை) போன்று மாற்றி நீரை வடிக்கச் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சின்ன நாகவில்லு பகுதியில் உள்ள நீரை வெளியேற்றுவது கடினமாக உள்ளது. மண்ணின் தன்மை மற்றும் நில அமைப்பு காரணமாக, அந்த நீரைத் தடாகத்திற்கு (Lagoon) கொண்டு செல்ல வேண்டுமானால் சுமார் 30 அடி ஆழமான வாய்க்காலைத் தோண்ட வேண்டியிருக்கும் என இலங்கை நில மேம்பாட்டுக் கூட்டுத்தாபனத்தின் (SLLDC) தலைவரின் ஒருங்கிணைப்பு அதிகாரி பொறியியலாளர் குமார தவதஸ்ஸ தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரமான விவசாயப் பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகள் நீரில் மூழ்கி அழியும் அபாயத்தில் உள்ள அதேவேளை, வில்லுகளைச் சுற்றியுள்ள நிலம் உயரமாக இருப்பதால், மழையினாலும் ஊற்றுக்களினாலும் சேரும் நீர் இயற்கையாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதுள்ள இயற்கை நீரோடைகளைச் சுத்தப்படுத்தி தடைகளை நீக்குதல் மற்றும் புதிய வாய்க்கால்களை அமைப்பதன் மூலம் மேலதிக நீரை வெளியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததுடன், தற்போதைய அவசர நிலையைத் தணிக்க குறுகிய காலத் தீர்வுகளையும், எதிர்காலத்தில் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நீண்ட கால மற்றும் நிலையான தீர்வுகளையும் வழங்க அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







