புத்தளம் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட ‘டித்வா’ சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட எருக்கலம்பிட்டி கிராமத்தின் உட்கட்டமைப்புகள், இரண்டு மாதங்கள் கடந்தும் இன்னும் சீரமைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எருக்கலம்பிட்டி கிராமத்தின் பிரதான போக்குவரத்துப் பாதையான வைத்தியசாலை வீதி, தற்போது பயணிக்க முடியாத அளவிற்கு மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்படுத்தும் இவ்வீதி, அனர்த்தத்தின் போது ஏற்பட்ட சேதங்களினால் மரணக் குழிகள் நிறைந்த பாதையாக மாறியுள்ளது.
இவ்வீதியூடாகவே அப்பகுதியின் பாடசாலை மாணவர்கள் மற்றும் வைத்தியசாலைக்குச் செல்வோர் பயணிக்க வேண்டியுள்ளது.
வீதியின் அபாயகரமான நிலைமையால் மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதோடு, அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கூட இவ்வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு ஒருபுறமிருக்க, கிராமத்தின் ஒரே ஒரு பொது விளையாட்டு மைதானம் வெள்ளத்தினால் முற்றாகச் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி இளைஞர்களின் விளையாட்டுச் செயற்பாடுகள் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கியுள்ளன. கிராமத்தின் குறுக்கு வீதிகள் பலவும் இன்னும் குன்றும் குழியுமாகவே காட்சியளிக்கின்றன.
அனர்த்தம் ஏற்பட்டு நீண்ட நாட்களாகியும், உரிய அதிகாரிகள் எவ்விதமான புனரமைப்புப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழைக் காலங்களில் இந்தப் பாதிப்பு இன்னும் மோசமடையக்கூடும் என்பதால், உடனடியாக இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களும் அதிகாரிகளும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- மிகவும் மோசமாகவுள்ள வைத்தியசாலை வீதியை உடனடியாகப் புனரமைத்தல்.
- பாதிக்கப்பட்ட குறுக்கு வீதிகளை சீரமைத்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தல்.
- சேதமடைந்த விளையாட்டு மைதானத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
எருக்கலம்பிட்டி கிராம மக்களின் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, உரிய அதிகாரிகள் மிக விரைவில் கள ஆய்வுகளை மேற்கொண்டு இப்பணிகளை ஆரம்பிப்பார்கள் என ஊர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.













