முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் இசுறு நெத்திகுமார முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த அறிவிப்பை விடுத்தார்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜரானார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், தமது மனைவியான பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய, வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி, அங்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் உடல் நிலை மோசமடைந்த நிலையில், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அதன்பின்னர் முன்னாள் ஜனாதிபதி சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


