நிசாம் காரியப்பர் மற்றும் அதாஉல்லாவின் பலத்த எதிர்ப்பினால் நுரைச்சோலை பிரேரணை புஸ்வாணமானது
(எஸ்.எம்.அறூஸ்)
அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும்,கிராமிய அபிவிருத்தி,சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் இன்று (30) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்நாயக்க, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுல. ரத்நாயக்க, எம்.எஸ்.உதுமாலெப்பை, முத்து ரத்வத்த, ஏ.ஆதம்பாவா, கே.கோடிஸ்வரன், எம்.எஸ்.அப்துல் வாசித், சட்டத்தரணி நிசாம் காரியப்பர், சட்டத்தரணி பிரியந்த விஜேரத்ன உள்ளிட்ட கிழக்குமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், 2025 – 2026ம் ஆண்டில் அம்பாரை மாவட்ட செயலகம் ஊடாக செயற்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள் மற்றும் வேறு தாபனங்கள் ஊடாக செயற்படுத்தப்படும் செயற்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
தொடர்ந்தும் அம்பாரை மாவட்டத்தில் காணப்படும் நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி, காணி,வீதி அபிவிருத்தி,திண்மக்கழிவகற்றல், குடிநீர் திட்டம், யானை வேலி பாதுகாப்பு முறைமை போன்ற பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் உரிய அதிகாரிகள் இவ்விடயங்களில் அதீக அக்கரையுடன் பணியாற்றுமாறு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் மாகாண ஆளுநர் ஆகியோரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
மேலும், நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை நீதிமன்றத் தீர்ப்பை மையமாக வைத்து மக்களிடம் கையளிக்கும் பிரேரணையை பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ கொண்டு வந்த போது, பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் ஏ.எல்.எம்.அதாஉல்லா ஆகியேர் பலமாக எதிர்த்ததுடன் பாராளுமன்றக் குழுவின் ஊடாகவே இதனை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமென நிசாம் காரியப்பர் இங்கு தெரிவித்தார்.
நுரைச்சோலை வீட்டுத் திட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்குரியது எனவும் அக்காணிகள் யாவும் அக்கறைப்பற்று பிரதேசத்திற்குரிய காணிகள் என்பதையும் மிகவும் ஆணித்தரமாக குரல் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களும் தனது கருத்தை தெரிவித்தார். இதன்போது இரு தரப்பினருக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு எதிர்காலத்தில் பிரதேசங்களின் அபிவிருத்தி வேலைத்திட்ட நிகழ்வுகளில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கொண்டு வந்த பிரேரணையை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பிரதியமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ ஏற்றுக்கொண்டு அதற்கு நடவடிக்கை எடுப்பதாக இங்கு தெரிவித்தார்.
தொடர்ந்தும், பிரஜா சக்தி குழுக்கள் நியமித்தப்படும்போது, கட்சி அரசியல் சாராமல் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்பதுடன் அவ்வாறு நியமிக்கப்பட்டால் தனக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாரும் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ குறிப்பிட்டார்.



