கல்வியே ஒரு சமூகத்தின் கண்கள். அந்தக் கண்கள் இருண்டுவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில், இன்று புத்தளம் நகரில் பெற்றோர்கள் ஒருமித்த குரலில் திரண்டனர்.
6-ம் தர மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோரி, கல்வி அதிகாரிகளின் கதவுகளைத் தட்டி தங்களது நீதியான கோரிக்கையை முன்வைத்தனர்.
இன்று காலை புத்தளம் வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக பெற்றோர்கள் பெருமளவில் திரண்டனர். எந்தவிதமான வன்முறைகளுமின்றி, மிகவும் அமைதியான முறையில் அதேநேரம் அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
தமது பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாவதை பொறுத்துக்கொள்ள முடியாத பெற்றோர்கள், கைகளில் ஏந்தியிருந்த பதாதைகள் வழியே அதிகாரிகளுக்கு பலமான செய்தியைச் சொல்ல முயன்றனர். “புதிய பாடத்திட்டம் எங்கே?”, “எங்கள் பிள்ளைகளின் கல்வி உரிமையை பறிக்காதே!” போன்ற வாசகங்கள் அந்த இடத்தையே உணர்வுபூர்வமாக மாற்றியது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் பேரணியாகச் சென்று, தமது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜரை (Petition) உரிய அதிகாரிகளிடம் கையளித்தனர்.
முதலில், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் நிர்வாக அதிகாரி மனூஷா செவ்வந்தி அவர்களிடம் மகஜர் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திக்க சில்வா அவர்களையும் நேரில் சந்தித்து தமது கவலைகளையும் கோரிக்கைகளையும் பெற்றோர்கள் பகிர்ந்து கொண்டனர்.
ஏன் இந்தப் போராட்டம்?
புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டும், அது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வராதது மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளைப் பாதித்துள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பரீட்சைகள் நெருங்கும் வேளையில், போதிய வழிகாட்டல்கள் இன்றி மாணவர்கள் தவிப்பதாகவும், இதற்கு கல்வி அமைச்சு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
சமூகத்தின் அடித்தளமான மாணவர்களின் கல்விக்காக, தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வீதிக்கு வந்த பெற்றோர்களின் இந்த முயற்சி, அதிகாரிகளின் செவிகளை எட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






