ஜூட் சமந்த
ராகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நபர் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, பேலியகொட பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதம்பை – இஸ்சம்மடில்ல பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபர் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளைத் தொடர்ந்து, அவரது வீட்டு முற்றத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 போர்ட் ரக துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 14 உயிர்ச்சுள்ள தோட்டாக்கள் கடந்த 19ஆம் திகதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், வெளிநாட்டிலிருந்து பாகங்களாகக் கொண்டு வரப்பட்டு இலங்கையில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்ட, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் ஒன்றும் குறித்த வீட்டில் இருந்து அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட இந்தத் துப்பாக்கி ஏதேனும் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் தற்போது மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


