ஜூட் சமந்த
சிலாபம் – குருநாகல் வீதியின் கொக்காவில சந்தி பகுதியில் லாரி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்த விபத்து கடந்த 23-ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் சிலாபம், கிழக்கு கரவிட்டகார பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய மதுஷானி ஹெட்டியாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து பயணித்த நெதுல் ஆதித்யா என்ற 7 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலாபத்திலிருந்து வந்த மோட்டார் சைக்கிள், கொக்காவில சந்தியில் வலதுபுறமாக திரும்புவதற்காக முற்பட்டபோது, சிலாபத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த லாரி ஒன்று, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் பலமாக மோதியதில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லாரியை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளதுடன், அதனை ஓட்டி வந்த தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


