எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தினால் இலங்கையின் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பருப்பு, நெத்திலி மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற பல அடிப்படைப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகப் புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறானதொரு சூழ்நிலையில், நுகர்வோர் அநீதிக்குள்ளாவதைத் தடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சில வியாபாரிகள் அத்தியாவசியப் பொருட்களை மறைத்து வைத்து, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, விலைகளை நியாயமற்ற முறையில் உயர்த்துவதாகவும் அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் சந்தையில் இடம்பெறக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதற்காக, அதிகாரசபையின் அனைத்து விசாரணை உத்தியோகத்தர்களும் வார இறுதி நாட்கள் மற்றும் அரச விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு இழைக்கப்படும் அநீதிகள் அல்லது சந்தை முறைகேடுகள் தொடர்பான புகார்களைச் சமர்ப்பிக்க 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


