இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நுகர்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
எரிபொருள் விலை உயர்வால் முட்டை ஒன்றின் விலை 40 ரூபா வரையிலும், தோல் உடனுள்ள குளிரூட்டப்பட்ட (Frozen) கோழி இறைச்சி ஒரு கிலோகிராமின் விலை 100 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
முட்டைகளின் புதிய விலை விபரம்:
- சிறிய அளவிலான முட்டை – 37 ரூபா.
- நடுத்தர அளவிலான முட்டை – 39 ரூபா.
- பெரிய (சிவப்பு) முட்டை – 40 ரூபா.
அதேவேளை, பண்ணைகளிலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படும் தோல் உடனுள்ள கோழி இறைச்சி ஒரு கிலோகிராமின் விலை தற்போது 1,200 ரூபா முதல் 1,250 ரூபா வரை உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையேற்றம் கோழிப்பண்ணை தொழிலை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகர தெரிவித்துள்ளார்.
கோழிப்பண்ணைகளில் உள்ள சிறிய குஞ்சுகளை வெப்பப்படுத்துவதற்கு எரிவாயு பயன்படுத்தப்படுவதாகவும், தற்போதைய எரிபொருள் விலை உயர்வு இத்தொழில்துறையை அசாதாரணமான முறையில் பாதித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


