இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, தற்போதைய வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலப்பகுதியில், தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சட்டவிரோதமான முறையில் இலாபம் அல்லது சலுகைகளைப் பெற்றுக்கொடுத்ததன் மூலம், இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் ஊழல் குற்றத்தைப் புரிந்ததாக இவருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதியில் குமார ஜயகொடி உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்முதல் மற்றும் இறக்குமதி பிரிவின் முகாமையாளராகப் பணியாற்றியுள்ளார். இதன்போது, குறித்த கூட்டுத்தாபனத்தின் ஹுனுப்பிட்டிய களஞ்சிய வளாகத் தரையில் கார்பட் இடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட கொள்முதல் செயல்முறையிலேயே முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேகநபருக்கு எதிராக இந்தக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நிலக்கரி மோசடி தொடர்பிலும் பாரிய பிரச்சினை எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் அரசியல் மற்றும் பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


