வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட சில தரப்பினருக்கு தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட இரட்டைப் கொடுப்பனவுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து அமைச்சர் மேலும் விளக்குகையில்:
இலங்கை வங்கிகளுக்கு இடையிலான கொடுப்பனவு கோப்புகளை (Interbank Payment Files) பரிமாற்றம் செய்தபோது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒப்பந்தக்காரர்கள் உட்பட சில வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு ஒரே கொடுப்பனவு இரண்டு முறை வரவு வைக்கப்பட்டுள்ளது.
வங்கி முறைமையில் இவ்வாறான தவறான கொடுப்பனவுகள் இடம்பெறும் போது, அவற்றை மீண்டும் அறவிடுவதற்கு முறையான மற்றும் நிலையான பொறிமுறை ஒன்று ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அந்தப் பொறிமுறையின் ஊடாக, தவறுதலாக வைப்பிலிடப்பட்ட பணத்தை மீளப் பெறுவதற்கான சாதாரண நடவடிக்கைகளை வங்கிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.
இந்தச் சம்பவத்தினால் அரசாங்கத்தின் கணக்குகளுக்கோ, நிறுவன ரீதியான கணக்குகளுக்கோ அல்லது தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்கோ எவ்வித நிதி இழப்பும் அல்லது பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சர் உறுதியளித்தார். வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கோ அல்லது வேறு கணக்கு உரிமையாளர்களுக்கோ இதனால் எவ்வித நஷ்டமும் ஏற்படாது எனவும், மேலதிகமாகச் சென்ற பணத்தை மீளப் பெறும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது இலங்கை வங்கி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து இந்த நிலைமையை சீர்செய்வதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.


