ஜூட் சமந்த
நாத்தாண்டியா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து, கடந்த ஒரு மாத காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாத்தாண்டியா – பஹல வலஹாபிட்டிய பகுதியைச் சேர்ந்த பனம்பரம்கே ரொஷான் பிரகீத் (51 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி இரவு 11:00 மணியளவில் நாத்தாண்டியா நகரில் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, முன்னால் சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானார்.
விபத்தில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சுமார் 30 நாட்கள் மரணப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 29) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வேகமாக வந்த மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மாரவில பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


