மக்கள் வங்கியின் பணப்பரிமாற்றத் தளத்தில் ஏற்பட்ட கணினி ஒழுங்கமைப்பு மாற்று விகிதக் கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு 656 மில்லியன் ரூபாய் தவறுதலாக வைப்பிலிடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு தவறுதலாக சென்ற சுமார் 656 மில்லியன் ரூபாயை மீட்கும் நடவடிக்கைகளில் வங்கி தற்போது ஈடுபட்டுள்ளது. இக்கோளாறு 2023 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட பணப்பரிமாற்றங்களைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மே 16 அன்று அரச வங்கியான மக்கள் வங்கி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
குறிப்பிட்ட ஒரு வெளிநாட்டு நாணயத்திற்கான மாற்று விகிதத்தை கணக்கிடுவதில் ஏற்பட்ட தவறு காரணமாக, குறிப்பிட்ட காலப்பகுதியில் சில வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய தொகையை விடவும் கூடுதல் தொகையைப் பெற்றுள்ளனர். எனினும், இந்தத் தொழில்நுட்பப் பிரச்சினை தற்போது முழுமையாகக் கண்டறியப்பட்டு, சரிசெய்யப்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டைக் கண்டறிந்தவுடன், வங்கி உடனடியாக ஒரு விரிவான உள்வாரி மறுஆய்வைத் தொடங்கியதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளையும் பலப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட தொடர்புடைய ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, தற்போதும் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
நிதிநிலை மீதான தாக்கம்
இந்தச் சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள நிதித் தாக்கம் தோராயமாக 656 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொகை அந்தந்தக் காலப்பகுதிக்கான வங்கியின் நிதி அறிக்கைகளில் ஏற்கனவே முழுமையாக உள்வாங்கப்பட்டு கணக்குக் காட்டப்பட்டுள்ளது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, இதனால் வங்கிக்கு மேலும் எந்தவொரு நிதிப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் வங்கித் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சென்றடைந்த கூடுதல் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான சட்டரீதியான மீட்பு நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு, அதில் கணிசமான முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் மக்கள் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.


