தேனிலவு வலையில் சிக்கிய மதப்போதகர்! நிர்வாண வீடியோ மிரட்டலில் ரூ.1.85 லட்சம் பறிப்பு – புத்தளத்தில் அதிர்ச்சி ‘ஹனி ட்ராப்’ கும்பல் அம்பலம்
ஜூட் சமந்த
புத்தளத்தில் திட்டமிட்டு விரிக்கப்பட்ட ‘தேனிலவு’ வலையில் சிக்கிய இஸ்லாமிய மதப்போதகர் ஒருவரிடம் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி ரூபாய் 1 இலட்சத்து 85 ஆயிரம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் – மனைவி ஜோடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் – தில்அடியைச் சேர்ந்த 30 மற்றும் 35 வயதுடைய குறித்த தம்பதியினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களை ஜூன் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நட்பாக ஆரம்பித்து மோசடியாக முடிந்த சம்பவம்
கற்பிட்டி, பள்ளிவாசல்துறை – முதலப்பாலி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மதப்போதகர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மல்வானை பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றி வரும் அவர், கடந்த மே மாதம் புத்தளம் கொழும்பு முகத்திடல் அருகே நின்றுகொண்டிருந்தபோது குறித்த தம்பதியினருடன் தாம் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார்.
அறிமுகம் விரைவில் நட்பாக மாறியதுடன், தொடர்ந்து தொலைபேசி தொடர்புகளும் இடம்பெற்றுள்ளன. பின்னர் கடந்த 6 ஆம் திகதி இரவு, குறித்த பெண் தங்களது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
வீட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி
பெண்ணின் அழைப்பை நம்பி வீட்டிற்கு சென்ற குறித்த நபர், அங்கு அவரின் கண்டிப்பான வேண்டுகோளுக்கு இணங்க ஆடைகளை அகற்றிய நிலையில் இருந்தபோது, திடீரென பெண்ணின் கணவரும் மற்றொருவரும் அறைக்குள் திட்டமிட்ட வகையில் அதிரடியாக புகுந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அவரிடம் இருந்த ரூபாய் 18,500 பணமும் தேசிய அடையாள அட்டையும் பறிக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், அவர் அரை நிர்வாண நிலையில் இருந்த காட்சிகளை கைபேசியில் பதிவு செய்த சந்தேகநபர்கள், “கூறும் தொகையை வழங்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம்” எனவும் மிரட்டியுள்ளனர்.
அவமானத்திற்கும் சமூக மதிப்பிற்கும் அஞ்சி, குறித்த நபர் பல தவணைகளில் ரூபாய் 1 இலட்சத்து 85 ஆயிரம் வரை பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
20-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம்!
கைது செய்யப்பட்ட தம்பதியினரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில், இது தனிப்பட்ட சம்பவம் அல்ல என்பது தெரியவந்துள்ளது.
வழியில் செல்லும் ஆண்களுடன் பழகி, பின்னர் வீட்டிற்கு வரவழைத்து, நிர்வாண அல்லது அரை நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து மிரட்டிப் பணம் பறிப்பதே இவர்களின் வழக்கமான செயல்முறையாக இருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
புத்தளம் நகரைச் சுற்றிய பகுதிகளில் இதுபோன்ற சுமார் 20 சம்பவங்கள் வரை இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்ற போதிலும், சமூக அவமானத்திற்கு அஞ்சி பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முன்வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை இரண்டு புகார்கள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், அவற்றில் ஒன்றும் பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள்
இந்த மோசடி வலையமைப்பின் முழுமையான பின்னணியை கண்டறியும் நோக்கில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று ஏமாற்றப்பட்டு, மிரட்டப்பட்டு அல்லது பணம் பறிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருந்தால், அச்சமின்றி புத்தளம் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவை அணுகி புகார் அளிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம், சமூக ஊடகங்களையும் தனிநபர் மரியாதையையும் ஆயுதமாக பயன்படுத்தி நடைபெறும் ‘ஹனி ட்ராப்’ மோசடிகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளதுடன், அந்நியர்களுடன் ஏற்படுத்தும் தொடர்புகளில் அதிக எச்சரிக்கை தேவை என்பதையும் நினைவூட்டியுள்ளது.


