- 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
- நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால் இந்த “சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டமூலம்” கையளிக்கப்பட்டுள்ளது.
- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் நியமிக்கப்படும் விசேட ஆணையாளர் ஊடாக இந்தச் சட்டம் கண்காணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இலங்கையில் டிஜிட்டல் தலைமுறையின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய மிக முக்கியமானதொரு சட்ட நகர்வு நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்குள்ளும் சமூக ஊடக மாயைக்குள்ளும் மூழ்கிக்கிடக்கும் சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில், புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசாங்கம் தயாராகி வருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபாவினால், “சமூக ஊடக குறைந்தபட்ச வயது சட்டமூலம்” (Social Media Minimum Age Bill) இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. இணைய உலகிலுள்ள ஆபத்தான பக்கங்களில் இருந்தும், தீங்கிழைக்கும் உள்ளடக்கங்களில் இருந்தும் நமது நாட்டுச் சிறுவர்களைப் பாதுகாப்பதே இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும்.
அமைச்சருக்குக் கிடைக்கும் அதிரடி அதிகாரம்!
இனிவரும் காலங்களில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக் போன்ற சமூக ஊடகத் தளங்களை அணுகுவதைத் தடுப்பதற்கான கடுமையான விதிமுறைகளை வகுக்கும் அதிகாரம் உரிய அமைச்சருக்கு வழங்கப்படவுள்ளது. இதுமட்டுமன்றி, சிறுவர்கள் ஒரு நாளில் எவ்வளவு நேரம் (Screen Time) சமூக ஊடகங்களைப் பயன்படுத்தலாம் அல்லது எந்தெந்த நேரங்களில் மட்டுமே பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தும் விதிகளும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன. இதனால், பிள்ளைகளின் இணையப் பயன்பாட்டைப் பெற்றோரால் மாத்திரமன்றி, சட்ட ரீதியாகவும் கட்டுப்படுத்த வழி பிறக்கவுள்ளது.
கண்காணிக்கப் போவது யார்?
இந்தச் சட்டம் வெறும் காகிதத்தோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை. இதனைத் தீவிரமாகக் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதற்காக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் கீழ் விசேட ‘அங்கீகரிக்கப்பட்ட ஆணையாளர்’ ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். இவரினூடான கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலமே சட்டத்தை மீறுபவர்கள் மீதான நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும்.
விதிமுறைகளில் உள்ள முக்கிய தெளிவுபடுத்தல்:
இச்சட்டமூலம் அமுலாக்கப்படும் போது, அதன் சிங்கள மற்றும் தமிழ் பதிப்புகளுக்கு இடையே ஏதேனும் மொழிபெயர்ப்பு முரண்பாடுகள் அல்லது சந்தேகங்கள் ஏற்படும் பட்சத்தில், சிங்கள மொழியிலான உரையே மேலோங்கி நிற்கும் (இறுதியானதாகக் கருதப்படும்) என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணைய உலகிற்கு அடிமையாகி வரும் இன்றைய சிறுவர் சமூகத்தை, இந்த புதிய சட்டமூலம் எவ்வாறு நல்வழிப்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


