இன்றைய அவசர உலகில் வீதி விபத்துக்கள் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், விபத்தில் சிக்குபவர்களின் உயிர்களைத் தற்காத்துக்கொள்ளும் நோக்கில் இலங்கையில் மிக முக்கியமானதொரு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் வீதியில் பயணிக்கும் போது எப்போது என்ன நடக்கும் என்று யாராலும் கூற முடியாது. திடீரென ஒரு விபத்து நேர்ந்தால், ஆம்புலன்ஸ் வரும் வரை அல்லது காயமடைந்தவரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வரைக்கும் இடைப்பட்ட சில நிமிடங்கள் இருக்கிறதே… அதுதான் ஒரு மனிதனின் வாழ்வா சாவா என்பதைத் தீர்மானிக்கும் ‘கோல்டன் ஹவர்’ (Golden Hour).
இந்த முக்கியமான நேரத்தில் விபத்தில் சிக்குபவர்களின் உயிரை எப்படிக் காப்பாற்றுவது? இதோ இதற்கான பதிலை சிலாபம் பொலிஸார் இப்போது கையில் எடுத்துள்ளனர்.
09 பொலிஸ் நிலையங்கள்… 37 ஹீரோக்கள்!
வீதி விபத்துக்கள் இடம்பெறும் போது சம்பவ இடத்திற்கு முதன்முதலாக ஓடி வருவது போக்குவரத்து பொலிஸார்தான். ஆனால், அவர்களுக்கு மருத்துவ முதலுதவி பற்றிய முறையான அறிவு இல்லாவிட்டால், காயமடைந்தவர்களைக் கையாள்வதில் சிக்கல் ஏற்படும். இதனை உணர்ந்து, சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக கேட்போர் கூடத்தில் அண்மையில் ஒரு விசேட பயிற்சிப் பட்டறை அரங்கேறியது.
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 09 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த 37 போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த அதிமுக்கியத்துவம் வாய்ந்த பயிற்சியில் உள்வாங்கப்பட்டனர்.
செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய ‘லைஃப் சேவிங்’ வித்தைகள்
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் புத்தளம் கிளையினர்தான் பொலிஸாருக்கு இந்த உன்னதமான பயிற்சியை வழங்க முன்வந்தனர். விபத்து நடந்த இடத்தில் இரத்தப் போக்கை எப்படிக் கட்டுப்படுத்துவது, செயற்கை சுவாசம் (CPR) எவ்வாறு வழங்குவது, எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் நோயாளியை எவ்வாறு தூக்குவது போன்ற பல அவசர கால முதலுதவி உத்திகள் செய்முறை ரீதியாக பொலிஸாருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன.
இனி சிலாப வீதிகளில் விபத்துக்கள் நேர்ந்தால், அங்கு நிற்கும் பொலிஸார் வெறும் சட்டம் ஒழுங்கை மட்டும் காப்பவர்களாக இருக்க மாட்டார்கள்; மாறாக உயிர்காக்கும் முதலுதவியாளர்களாகவும் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
இந்தப் பயிற்சியை மிகச் சிறந்த முறையில் நிறைவு செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுக்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தகவல் மற்றும் புகைப்படம்: ஜூட் சமந்த



