இலங்கை இணைய ஊடகங்களில் தற்போது அதிவேகமாகப் பகிரப்பட்டு வரும் ஒரு அதிர்ச்சித் தகவல் எமது செய்திப் பிரிவுக்குக் கிடைத்துள்ளது. பெற்ற தாய் என்றும் பாராமல், அவர் வசித்து வந்த வீட்டிற்குத் தீ வைத்ததுடன், அவரை கூர்மையான ஆயுதத்தால் வெட்டிப் படுகாயப்படுத்திய கொடூர மகன் ஒருவரைத் தேடி மாரவில பொலிஸார் வலை வீசியுள்ளனர். நாத்தாண்டியா, அசோகபுர பகுதியில் கடந்த 30ஆம் திகதி மாலை இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
வர்ணகுலசூரிய பெர்னாண்டோ (வயது 59) என்ற அசோகபுரத்தைச் சேர்ந்த தாயே இவ்வாறு மாரவில தள வைத்தியசாலையில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று இந்தத் தாயின் வீட்டிற்கு வந்த அவரது மகன், தாயுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டைத் தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த தாய், உடனடியாக மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து அன்றைய தினமே மாலை மாரவில பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு திரும்பியுள்ளனர். பொலிஸார் வந்து விசாரித்ததால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற மகன், பொலிஸார் அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் தாயின் இருப்பிடத்திற்குத் தேடி வந்து தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.
வைத்தியசாலை கட்டிலில் இருந்து தாய் சொன்ன வாக்குமூலம்!
“என் மகன் என் வீட்டைக் கொளுத்தினான். அதுபற்றி பொலிஸார் வந்து விசாரித்த கோபத்தில், பொலிஸார் போன உடனேயே ஓடிவந்து என்னைக் கத்தியால் வெட்டினான். அந்த வீட்டில் நான் மட்டும்தான் தனியாக வாழ்ந்து வந்தேன்” என பாதிக்கப்பட்ட தாய் வைத்தியசாலை பொலிஸாரிடம் கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது நாத்தாண்டியா – தம்போவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரான மகன் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு மாரவில பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தகவல்: ஜூட் சமந்த


