இலங்கையில் மாரடைப்பு மற்றும் இருதய நோய்களால் பாதிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களின் உயிர்களைக் காக்கும் நோக்கில், ஒரு மாபெரும் மருத்துவப் புரட்சி இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அரங்கேறியுள்ளது. தனியார் வைத்தியசாலைகளில் பல இலட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய அதிநவீன இருதய நோய் சிகிச்சைகளை, இனி நமது நாட்டின் சாதாரண மக்களும் மிக இலகுவாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ளும் புதிய யுகம் பிறந்துள்ளது.
இலங்கை மருத்துவத்துறையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வகையில், 600 மில்லியனுக்கும் அதிக முதலீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு ‘கேத் லேப்’ (Cardiac Catheterization Laboratory Complex) எனப்படும் இருதய நோய் சிகிச்சை ஆய்வகங்கள் மற்றும் முழுமையாக நவீன மயப்படுத்தப்பட்ட இருதய நோய் சாய்சாலை பிரிவு (Renovated Cardiology Day Case Unit) என்பன இன்று (02) உத்தியோகபூர்வமாக மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. இத்திறப்பு விழாவை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வைத்தார்.
ஒரு வருடக் காத்திருப்புப் பட்டியல்… இனி ஒரே மாதத்தில் முடியப்போகுது!
இதய அறுவை சிகிச்சை மற்றும் அஞ்சியோகிராம் (Angiogram) போன்ற அவசரப் பரிசோதனைகளுக்காக இலங்கை மக்கள் இதுவரை மாதக்கணக்கில், ஏன் ஒரு வருடம் வரை கூட அரச வைத்தியசாலைகளில் காத்திருக்க வேண்டிய ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை காணப்பட்டது. ஆனால், இந்த புதிய ஆய்வகங்களின் வருகையோடு, அந்த ஒரு வருடக் காத்திருப்புப் பட்டியலை வெறும் ஒரே மாதமாகக் குறைப்பதற்கான துரித திட்டங்கள் தற்போது அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதுமட்டுமன்றி, நாட்டின் இருதய சிகிச்சை வரலாற்றையே மாற்றியமைக்கப் போகும் மற்றுமொரு பிரம்மாண்ட அறிவிப்பையும் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது வெளியிட்டார். வரும் 2029 ஆம் ஆண்டளவில், தேசிய வைத்தியசாலை வளாகத்திற்குள் சகல நவீன வசதிகளையும் கொண்ட 16 மாடிகளை உடைய பிரம்மாண்ட ‘தேசிய இருதயநோய் சிகிச்சை நிலையம்’ அமைக்கப்பட்டு, மக்களின் பாவனைக்கு முழுமையாக கையளிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்பு மாற்றமானது, இனிவரும் காலங்களில் இதய நோய்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவீன உலகிற்கு ஈடுகொடுக்கும் வகையிலான இந்த மருத்துவ வசதிகள், இலங்கையர்களுக்கு தங்குதடையற்ற, தரமான சுகாதார சேவையை உறுதி செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.






