உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த 2026 FIFA உலகக்கிண்ணத்தின் முதலாவது நாக்-அவுட் சுற்றில், இணை வழங்கு நாடான கனடா மற்றும் பலம் வாய்ந்த மொரோக்கோ அணிகள் மோதின. கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று வரலாற்று சாதனை படைத்த கனடா அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால், அவர்களால் கோல் போடும் வாய்ப்புகளை துரதிர்ஷ்டவசமாக முழுமைப்படுத்த முடியவில்லை.
மைதானத்தில் பதற்றம்: மொரோக்கோவிற்கு விழுந்த பலத்த அடி!
கடந்த 2022 உலகக்கிண்ணத்தில் அரையிறுதி வரை சென்று சாதனை படைத்த ‘அட்லஸ் லயன்ஸ்’ (Morocco) அணிக்கு ஆரம்பம் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. ஆட்டத்தின் 22வது நிமிடத்திலேயே அணியின் முன்னணி கோல் வேட்டையாளர் இஸ்மைல் சைபாரி (Ismael Saibari) உபாதைக்குள்ளாகி மைதானத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணிகளும் முட்டி மோதிய இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் நடுவரால் 6 மஞ்சள் அட்டைகள் (Yellow Cards) காண்பிக்கப்பட்டன என்றால், மைதானத்தில் எவ்வளவு பரபரப்பு நிலவியிருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்! இறுதியாக முதல் பாதி ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது.
இரண்டாம் பாதியில் ருத்ரதாண்டவம் ஆடிய மொரோக்கோ!
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் ஆட்டத்தின் போக்கே தலைகீழாக மாறியது. 50வது நிமிடத்தில் மொரோக்கோவின் அசெடின் ஓனாஹி (Azzedine Ounahi) முதல் கோலை அடித்து மைதானத்தை அதிர வைத்தார். இதனால் கனடா அணி கடுமையான நெருக்கடிக்குள்ளானது. தொடர்ந்து பதிலடி கொடுக்க கனடா முயன்ற போதிலும், மொரோக்கோவின் தற்காப்பு அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் மீண்டும் ஒரு மாயாஜாலம் செய்த ஓனாஹி, தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்து மொரோக்கோவின் வெற்றியை அசைக்க முடியாத இடத்திற்கு கொண்டு சென்றார்.
கடைசி நிமிட ‘பினிஷிங்’
ஆட்டம் முடியப்போகும் கூடுதல் நேரத்தில், மாற்று ஆட்டக்காரராக களம் புகுந்த சுஃபியான் ரஹிமி (Soufiane Rahimi) மொரோக்கோவின் 3வது கோலை அடித்து கனடாவின் உலகக்கிண்ணக் கனவை முற்றிலுமாக தகர்த்தார். 3-0 என்ற கோல் கணக்கு கனடா அணிக்கு சற்றே ஏமாற்றத்தை தந்தாலும், உலகக்கிண்ண வரலாற்றில் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கி, அஞ்சா நெஞ்சத்தோடு தலைநிமிர்ந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது கனடா அணி.
இனி வரும் ஜூலை 9ஆம் திகதி நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அல்லது பராகுவே அணியுடன் மொரோக்கோ மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




