உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த உலகக்கிண்ண நாக்-அவுட் சுற்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டீனாவை நேற்றைய போட்டியில் எகிப்து அணி அலறவிட்டுக் கொண்டிருந்தது. போட்டியின் 78வது நிமிடம் வரை 2-0 என முன்னிலையில் இருந்து, உலகக்கிண்ண வரலாற்றின் மிகப்பெரிய அதிர்ச்சியை நோக்கி எகிப்து நகர்ந்துகொண்டிருந்த வேளையில்தான், ஆட்டத்தின் போக்கையே மாற்றிய அந்த விபரீதம் அரங்கேறியது. அர்ஜென்டீனா 3-2 என்ற கணக்கில் அசாத்தியமாக மீண்டு வந்து வெற்றி பெற்றாலும், இப்போது அந்த வெற்றியின் பின்னணியில் “நடுவர்களின் சதி” இருப்பதாக கால்பந்து உலகம் கொதித்தெழுந்துள்ளது.
போட்டியின் இரண்டாவது பாதியில் எகிப்தின் முஸ்தபா ஜிகோ அடித்த அட்டகாசமான கோல், மைதானத்தையே அதிரவைத்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் வீடியோ உதவி நடுவர் (VAR), எகிப்து வீரர் மர்வான் அத்தியா, அர்ஜென்டீனாவின் லிசாண்ட்ரோ மார்டினஸின் காலை மிதித்தார் என்றுகூறி அந்த கோலை அதிரடியாக ரத்து செய்தார். கோல் அடிக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட 30 வினாடிகளுக்கு முன்னர், ஆட்டத்தின் ஆரம்பப் புள்ளியில் நடந்த இந்தச் சின்ன விஷயத்தைத் தேடிப் பிடித்து கோலை ரத்து செய்தமை எகிப்து மற்றும் உலக ரசிகர்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கதை இத்துடன் முடியவில்லை; ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஸ்கோர் 2-2 என சமநிலையில் இருந்தபோது, எகிப்தின் நட்சத்திர வீரர் மொஹமட் சலா அர்ஜென்டீனாவின் பெனால்டி எல்லைக்குள் அர்ஜென்டீன வீரரால் காலால் தட்டிவிடப்பட்டு வீழ்த்தப்பட்டார். ஆனால், அதற்கு நடுவர் பெனால்டி வழங்கவும் இல்லை, அதனை VAR மூலம் சோதிக்கவும் இல்லை. அந்த அதிர்ச்சியில் இருந்து எகிப்து மீள்வதற்குள், அர்ஜென்டீனா பதில் தாக்குதல் தொடுத்து, மேலதிக நேரத்தில் (Stoppage Time) வெற்றிக் கோலை அடித்து 3-2 என போட்டியைத் தன்வசமாக்கியது. எகிப்துக்கு ஒரு கண், அர்ஜென்டீனாவுக்கு ஒரு கண் என நடுவர்கள் காட்டிய இந்த “இரட்டை நிலைப்பாடு” தான் இப்போது உலக அளவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இந்த அநீதிக்கு எதிராக எகிப்திய கால்பந்து சம்மேளனத்தின் (EFA) தலைவர் ஹானி அபு ரிடா நேரடியாகக் களமிறங்கியுள்ளார். பிரெஞ்சு நடுவர் பிரான்சுவா லெடெக்சியர் தலைமையிலான ஒட்டுமொத்த நடுவர் குழுவையும், VAR அதிகாரிகளையும் உடனடியாக உலகக்கிண்ணத் தொடரிலிருந்து தூக்க வேண்டும் என FIFAவிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளார். “எகிப்து அணிக்கு எதிராக இழைக்கப்பட்டது அப்பட்டமான இனம் சார்ந்த பாரபட்சம் (Discrimination)” என்றும் எகிப்து சம்மேளனம் தனது அறிக்கையில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
போட்டிக்குப் பின்னர் ஊடகங்களைச் சந்தித்த எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்: “அவர்கள் உலக சாம்பியனை எப்படியாவது தொடரில் தக்கவைக்க விரும்பியிருக்கலாம். மெஸ்ஸி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று FIFA நினைத்திருக்கலாம். இதனால்தான் எகிப்துக்கு அப்பட்டமாக இழைக்கப்பட்ட அநீதியை நடுவர்கள் கண்டும் காணாமல் இருந்தனர். நான் இனி இந்த உலகக்கிண்ணப் போட்டிகளைப் பார்க்கவே மாட்டேன்” என கண்ணீரும் கோபமுமாகத் தெரிவித்ததுடன், “இந்தத் தொடரே பிக்ஸ் பண்ணப்பட்டது என்பது இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது” என பகிரங்கக் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். எகிப்தின் இந்த அதிரடிப் புகாரைத் தொடர்ந்து, சனிக்கிழமை சுவிட்சர்லாந்துடன் மோதவிருக்கும் அர்ஜென்டீனா அணியின் அடுத்த கட்ட நகர்வு பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது.





