“நமது சொந்த மண்ணில் நமக்கு முழுமையான உரிமை இருக்கிறது” என்ற நிம்மதியை விட ஒரு மனிதனுக்கு வேறு என்ன பெரிய மகிழ்ச்சி இருந்துவிட முடியும்? நீண்டகாலமாகக் காணி உரிமைகளுக்காகவும், சட்டப் சிக்கல்களுக்காகவும் அலையாய் அலைந்து கொண்டிருந்த கல்பிட்டி மக்களுக்கு நேற்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்வு கிட்டியுள்ளது!
அரச காணிகளின் உரிமையை முறையான ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தி, மக்களின் “அழகான வாழ்க்கைக்கான” அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கில், கல்பிட்டி பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்த “அருணெல்ல” சிறப்பு நடமாடும் சேவை நேற்று (2026.08.13) மிகவும் வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது.
சாதாரண நாட்களில் அரச அலுவலகங்களுக்குச் சென்று மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்களுக்கு, ஒரே கூரையின் கீழ் அனைத்துச் சேவைகளையும் கொண்டு வந்து சேர்ப்பதுதான் இந்த நடமாடும் சேவையின் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். கல்பிட்டி பிரதேச செயலாளரின் நேர்த்தியான தலைமத்துவத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஜே.எம்.பைசல் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க முனவந்தார்.
அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, மக்களுக்கான சேவையைத் தங்குதடையின்றி வழங்க அரச இயந்திரமே அங்குக் கூடியிருந்தது என்றால் அது மிகையல்ல! கல்பிட்டி பிரதேச சபையின் உப தலைவர் சமன் குமார ஹேரத், பிரதேச சபை உறுப்பினர் W.R. சஞ்சீவ பெர்னாண்டோ ஆகியோருடன், மாகாண காணி ஆணையாளர், மாகாண பிரதி காணி ஆணையாளர்கள் மற்றும் காணி திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் களத்தில் நின்று மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்தனர்.
கூடவே, காணி விவகாரங்களில் எழும் சட்ட ரீதியான சந்தேகங்களைத் தீர்ப்பதற்காகக் கல்பிட்டி மற்றும் நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், பிரதேச செயலகப் பணியாளர்களும் தீவிரமாகச் செயற்பட்டனர். இதன் பலனாக, பல வருடங்களாக இழுபறியில் இருந்த காணிச் சிக்கல்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டதோடு, தகுதியான பயனாளிகளுக்கு உத்தியோகபூர்வ காணி அனுமதிப்பத்திரங்களும் கௌரவமாக வழங்கி வைக்கப்பட்டன.
ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நடமாடும் சேவையின் மூலம் நேரடிப் பயன்பெற்று, தங்களது சொந்த நிலத்திற்கான உரிமையோடு முகத்தில் புன்னகையோடு வீடு திரும்பினர். மக்களின் தேவையை அறிந்து அரச இயந்திரம் கிராமத்திற்கே சென்று சேவை வழங்கிய இந்த “அருணெல்ல” முயற்சி, கல்பிட்டி வரலாற்றில் ஒரு மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது!




