அதிகாலை அதிர்வு, ஆழ்கடல் அலைகள்: இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் உருக்குலைந்த கிராமங்கள்!
இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியத்தில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அதிகாலை வேளையில் ஏற்பட்ட கோர நிலநடுக்கம், ஒட்டுமொத்தப் பிராந்தியத்தையுமே நிலைகுலைய வைத்துள்ளது. நேற்று (15) அதிகாலை ஏற்பட்ட இந்த பாரிய அனர்த்தத்தில் குறைந்தது 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், பெருமளவானோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (BNPB) அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அதியுயர் வீரியத்துடன் பதிவான இந்த நிலநடுக்கம், புளோரஸ் (Flores) தீவுப் பகுதியை மையமாகக் கொண்டு தாக்கியுள்ளது. பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோமீற்றர் என்ற மிகக் குறைந்த ஆழத்திலேயே இதன் மையம் அமைந்திருந்தமையால், அதிர்வின் தாக்கம் பூமிப்பரப்பில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியது.
நில அதிர்வைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது மீளப்பெறப்பட்ட போதிலும், அச்சமூட்டும் வகையில் 1.5 மீற்றருக்கும் அதிகமான உயரத்திற்கு சிறிய சுனாமி அலைகள் கடலோரப் பகுதிகளைத் தாக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இயற்கை அனர்த்தத்தின் கோரத்தாண்டவத்தால் 350-க்கும் அதிகமான வீடுகள் நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. அத்துடன் நின்றுவிடாது, 100-க்கும் மேற்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களும் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
நிலநடுக்கத்தை அடுத்து உருவான கடுமையான நிலச்சரிவுகள் பிரதான வீதிகளை முற்றாக மூடியுள்ளதுடன், மின்சார விநியோகமும் தொடர்பாடல் சேவைகளும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் வெளியுலகத் தொடர்புகளை இழந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது அனர்த்தம் நிகழ்ந்த பகுதிகளில் இராணுவம், பொலிஸார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து உயிர்காக்கும் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளனர். ஆயினும், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதாலும், போக்குவரத்து துண்டிக்கப்பட்ட தொலைதூர கிராமங்களை மீட்புக் குழுவினரால் உடனடியாக சென்றடைய முடியாத நிலை நிலவுவதாலும், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.





