கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிநவீன புதிய மின்சார ரயில் திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பமாகவுள்ளன.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் சேனாரத்ன, இத்திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் பணிகள் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்
மருதானை ரயில் நிலையத்தை பிரதான மையமாகக் கொண்டு இந்த நவீன மின்சார ரயில் சேவை இயங்கவுள்ளது. தினசரி அலுவலகப் பணிகளுக்காகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் கொழும்பு நகருக்குள் படையெடுக்கும் பொதுமக்களுக்கு மிகவும் துரிதமான, சூழல் நட்பான மற்றும் நவீனமயமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை வழங்குவதே இதன் பிரதான இலக்காகும்.
குறிப்பாக, தென் மாகாணத்திலிருந்து பயணிக்கும் பொதுமக்களுக்கு இத்திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது. பெலியத்தையிலிருந்து ‘ருகுணு குமாரி’ விரைவு ரயில் மூலம் வரும் பயணிகள், பாணந்துறை ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து இணைக்கப்படும் மின்சார ரயில் சேவை ஊடாக எவ்வித நெரிசலுமின்றி நேரடியாக கொழும்பு நகரப் பகுதிகளை சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் பல்வேறு உட்கட்டமைப்பு மேம்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், கொழும்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரச போக்குவரத்து வலையமைப்பை பலப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே ‘மெட்ரோ பஸ்’ (Metro Buses) சேவைகள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


