- “திருடும்போது தடுத்து நிறுத்தாத தகப்பன்மார், மாட்டியதும் கண்ணீர் விடுவதா?” – ஜனாதிபதி அநுரவின் அதிரடி சாட்டை!
- அரசியல் பழிவாங்கலா? நீலிக்கண்ணீரா? ஊழல்வாதிகளுக்கு இறங்கப்போகும் சட்டத்தின் சம்மட்டி!
- “குடும்பமாக திருடினால் ஒன்றாகத்தான் மாட்டுவார்கள்; நாம் என்ன செய்வது?” – பொலன்னறுவையில் கொந்தளித்த அநுர குமார!
பொது நிதியைச் சூறையாடி நாட்டை வங்குரோத்தாக்கிய ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை, எந்தவிதமான அனுதாபப் பொய்களோ அல்லது அரசியல் பழிவாங்கல் கூச்சல்களோ தடுத்து நிறுத்திவிட முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மிகக் காட்டமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற “மக்கள் ஆட்சி – இரு ஆண்டு பலம் – அனைவருக்கும் முன்னேற்றம்” என்ற விவசாயிகளின் மாபெரும் மக்கள் பேரணியில் உரையாற்றியபோதே, ஆட்சியாளர்களின் இந்த கடுமையான நிலைப்பாடு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
ஊழல் பேர்வழிகள் சட்டத்தின் பிடியில் சிக்கும்போதெல்லாம் ‘அரசியல் பழிவாங்கல்’ என்ற வழக்கமான அட்டையை கையில் எடுப்பதாகச் சாடிய ஜனாதிபதி, “எங்களுக்கு யாருடனும் காணி பிணக்குகளோ அல்லது தனிப்பட்ட குரோதங்களோ கிடையாது; ஆனால், இந்த நாட்டை அழித்து நாசமாக்கிய ஊழல்வாதிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதே நாம் தீர்த்து வைக்க வேண்டிய ஒரே கணக்கு” என்று சுட்டிக்காட்டி அடுத்தடுத்த நகர்வுகளின் தீவிரம் குறித்து எச்சரித்தார்.
சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்போது பொதுமக்களின் அனுதாபத்தைத் தூண்டுவதற்காக முதலைக் கண்ணீர் வடிப்பவர்களுக்கும் கடுமையான வார்த்தைகளால் ஜனாதிபதி பதிலடி கொடுத்துள்ளார்.
“களவுகள் நடந்து கொண்டிருந்த போதே தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளுக்குத் திருட வேண்டாம் என்று புத்திமதி கூறியிருக்க வேண்டும்; கையும் மெய்யுமாகப் பிடிபட்ட பின்னர் அழுது கண்ணீர் வடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அந்தப் போலி கண்ணீருக்கு நாங்கள் மயங்கப்போவதும் இல்லை, சட்டத்தை அனுதாபம் மீற நாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதும் இல்லை” என அதிரடியாகக் குறிப்பிட்டார்.
அதிகார வர்க்கத்தின் குடும்பப் பின்னணியோ அல்லது செல்வாக்கோ சட்டத்திற்கு முன்னால் எடுபடாது என்பதை ஆணித்தரமாகத் தெளிவுபடுத்திய அவர், இந்த நடைமுறை யாருக்கும் விதிவிலக்கல்ல என்பதை உறுதிப்படுத்தினார். “சட்டம் என்பது பாட்டியாக இருந்தாலும், தாயாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும் அல்லது மாமனாக இருந்தாலும் அனைவருக்கும் ஒன்றுதான். ஒரு குடும்பமே ஒட்டுமொத்தமாகத் திருட்டில் ஈடுபட்டால், ஒன்றாகத்தான் சிக்குவார்கள்; அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என நேருக்கு நேர் கேள்வி எழுப்பினார்.
மக்களின் வரிப்பணத்தில் ஒரு சதத்தைக்கூட இனி எவரும் தவறாகப் பயன்படுத்தத் துணியக்கூடாது என்பதற்கான பாடத்தை உணர்த்துவதே அரசின் தற்போதைய நடவடிக்கைகளின் ஒற்றை இலக்காகும். வெறுப்புணர்ச்சியால் அன்றி, நாட்டை மீளக் கட்டியெழுப்பும் தொலைநோக்குடனேயே இந்த சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், ஊழலை முழுமையாக ஒழித்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வரை இந்த நடவடிக்கை ஓயாது எனவும் ஜனாதிபதி சூளுரைத்துள்ளார்.





