- தீயை அணைக்கப் பறந்த வேளையில் விபரீதம்: வீதியில் கவிழ்ந்தது சிலாபம் தீயணைப்பு வாகனம்!
- ஆராச்சிக்கட்டுவவில் பரபரப்பு: உயிர்களைக் காக்க முற்பட்டு நிலைகுலைந்த தீயணைப்புப் படை!
- அதிவேகப் பயணத்தில் திடீர் திருப்பம்: சிலாபத்திலிருந்து முந்தல் நோக்கிச் சென்ற மீட்பு வாகனத்திற்கு நேர்ந்த கதி!
ஜுட் சமந்த
முந்தல் பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் அவசரப் பணிக்காகச் சீறிப்பாய்ந்து சென்ற தீயணைப்பு வாகனமொன்று, நடுவழியில் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலாபம் நகர சபைக்குச் சொந்தமான தீயணைப்பு வாகனம், இன்று (14) நண்பகல் முந்தல் நோக்கி விரைந்துகொண்டிருந்த வேளையில், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தை அண்மித்த பகுதியில் வைத்து திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலேயே தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
வீதியில் அஜாக்கிரதையாகவும் ஆபத்தான முறையிலும் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் சிறிய ரக லொறி ஒன்றையும் மோதிவிடக் கூடாது என்பதற்காக, தீயணைப்பு வாகனத்தின் சாரதி உடனடியாகத் திருப்பியுள்ளார். மற்றவர்களின் உயிரைக் காப்பாற்ற எடுத்த இந்தத் துரித முயற்சியின் போது, வாகனம் நிலைகுலைந்து வீதியில் புரண்டது.
வாகனம் மிக மோசமாக விபத்துக்குள்ளான போதிலும், தீயணைப்புப் படையினர் நல்வாய்ப்பாக எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளமை பெரும் நிம்மதியை அளித்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



