- கைது செய்ய பிடியாணை: முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- நீதிமன்ற உத்தரவு: கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமவினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
- நீதிமன்றம் செல்லாமை: வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் (21) அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமையே பிடியாணை பிறப்பிக்கப்படக் காரணமாகும்.
- வழக்கின் பின்னணி: 2016 ஆம் ஆண்டு கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக வீதிகளை மறித்துப் போராட்டம் நடத்தியமை தொடர்பான வழக்காகும்.
- சர்வதேச விஜய எதிர்ப்பு: ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயித் அல்-ஹுசைனின் இலங்கை விஜயத்தின் போதே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அதிரடிப் பிடியாணை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அப்போதைய ஆணையாளர் இளவரசர் செயித் அல்-ஹுசைன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை சுற்றியுள்ள பிரதான வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச முக்கிய சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபரான விமல் வீரவன்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை. இதனைக் கவனத்திற் கொண்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம, அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டு பிடியாணை பிறப்பித்துள்ளார்.


