- ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் இந்நியமனம் இன்று (21) உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தலைவருமான எம்.எஸ். அப்துல் வாசித்தின் பதவி விலகலை அடுத்தே இந்த வெற்றிடம் உருவானது.
- அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவத்தின் இராஜினாமாவைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்தவர் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- சட்டத்தரணி ஹபீப் றிபானின் பெயர் அடங்கிய உத்தியோகபூர்வ கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட அரசியல் களத்தில் எதிர்பாராத திருப்பமாக, கட்சியின் புதிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் றிபான் நேற்று (21) உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முக்கிய அரசியல் நகர்வு, கிழக்கு மாகாண அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் மூத்த உறுப்பினரும், தற்போதைய பிரதித் தலைவருமான எம்.எஸ். அப்துல் வாசித் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அண்மையில் இராஜினாமா செய்திருந்தார். அவரது இந்த பதவி விலகல் தேசிய அரசியலில் விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதனால் உருவான நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்திற்கே இந்நியமனம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பில் கட்சியின் மட்டத்தில் பலத்த ஆலோசனைகள் இடம்பெற்று வந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இளம் சட்டத்தரணியான ஹபீப் றிபானை களமிறக்க தலைவர் ரவூப் ஹக்கீம் இறுதி முடிவெடுத்துள்ளார்.
தலைமையின் இந்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து, சட்டத்தரணி ஹபீப் றிபானை நாடாளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் அறிவிக்குமாறு கோரி, கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்படி உத்தியோகபூர்வ அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவித்தலைத் தொடர்ந்து, சட்டத்தரணி ஹபீப் றிபான் விரைவில் சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். முஸ்லிம் காங்கிரஸின் இந்த புதிய அரசியல் நகர்வு பாராளுமன்றத்திலும் கிழக்கு மாகாண அரசியல் களத்திலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




